திருச்சி அருகே எரிமேடைக்கு செல்ல சாலை போட அதிக கமிஷன் - ஆடியோ லீக் பரபரப்பு

திருச்சி அருகே எரிமேடைக்கு செல்ல  சாலை போட அதிக கமிஷன் - ஆடியோ லீக் பரபரப்பு

எரிமேடைக்கு எவ்வளவு கேட்குறீங்க.. என தொடங்கும் முதல் நபரின் குரல், 10% என்றவுடன் சரி, சிமிண்ட் ரோட்டுக்கு எவ்வளவு கேட்குறீங்க.. 10 % என்றதும் சரி எல்லா வேலையும் நீங்களே பாருங்க, எனக்கு 5% கொடுத்திடுங்க… என முடிக்க, இரண்டாவது நபர் எதுக்கு? என கேட்கிறார். மொத்தத்தில 10% எடுத்து எல்லாருக்கு பிரிச்சு கொடுக்க அவர் பேசுகிறாரு என்கிறது மூன்றது குரல்.

எனக்கு 2% என நடுவில் ஒரு குரல், எம்.எல்.ஏக்கு கொடுத்தது போக அங்க டெப்பாசிட் கட்டி, டெண்டருக்கு பணம் கட்டி, அதுக்கு மேல எம்.எல்.ஏக்கு கமிஷன் கொடுத்து எல்லா வேலையும் வாங்குறோம்…என்கிறது முதல் குரல். எனக்கு உண்டானத பிரிச்சு கொடுங்க என பெண்ணின் குரல்… எனக்கு 10% கொடுத்துடுங்க.. (அட ஏம்மா.. மொத்தத்திலயே 10% தான் என்றவுடன்) நான் செலவழிச்சு தான் வந்து இருக்கேன் சும்மா ஒண்ணும் வரல என்கிறது பெண் குரல். அதனைத்தொடர்ந்து 7%, 2% என பேச… எத்தன % வேணாலும் கேளுங்க பில்லு எடுத்துதான் நான் பணம் தருவேன் முடித்து வைத்தது முதல் குரல்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே எரிமேடைக்கும், அதற்கு செல்லும் சிமெண்ட் பாதைக்கும் நடைபெறும் ஒப்பந்த பணிகளில் ஒதுக்கப்படும் கமிஷன் குறித்த விவாதம் தான் இந்த ஆடியோ வைரல். மருங்காபுரி ஒன்றியத்திற்குட்பட்ட காரைப்பட்டி ஊராட்சியில், காரைப்பட்டி – வடகாட்டுப்பட்டிக்கும் இடையே வடுகப்பட்டி மற்றும் மஞ்சம்பட்டி பகுதிக்கான மயான பகுதி உள்ளது. இங்கு எரிமேடை மற்றும் அங்கு செல்வதற்காக 100 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும் கொண்ட சிமெண்ட் சாலை அமைப்பதற்காக சுமார் ரூ.3.72 லட்சம் மதிப்பிலான ஒப்பந்த பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த ஒப்பந்த பணிகளில் ஊராட்சி செயலாளர், ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர்,இந்த ஒப்பந்த பணிகளில் ஊராட்சி செயலாளர், ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தங்களுக்கு ஒப்பந்த பணியில் கமிஷன் அளிப்பது குறித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற உரையாடல் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஒப்பந்த பணிகளில் 10, 7, 5, 2 என்ற சதவீதத்தில் கமிஷன் போனால் தரமான கட்டுமானப்பணிகள் நடைபெற வாய்ப்பில்லை என வேதனைத் தெரிவிக்கும் அப்பகுதிவாசிகள் இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்த கோரிக்கை வைத்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU