இலக்கியத்தில் விருந்தோம்பல் - பகுதி : 6
இலக்கியத்தில் விருந்தோம்பல் இது ஆறாவது அத்தியாயம். கடந்த அத்தியாயத்தில் நாம் பொருநாறாற்றுப்படையில் இருந்து ஒரு பாடலைப் பார்த்தோம். அதை படித்த சில வாசகர்கள் நம்மிடையே அதன் பாட்டுடைத் தலைவன் மற்றும் பாடலாசிரியர் யார் என்று குறிப்பிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று கேட்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
அதனால் இந்த தொடரிலும் அதே பாட்டுடைத் தலைவனை இன்னுமொரு பாடலுடன் விளக்குகிறோம். பாட்டுடைத் தலைவன் திருமாவளவன் என்ற இயற்பெயரைக் கொண்ட கரிகால் பெருவளத்தான் ஆவான். ஆம், காவிரிக்கு கரையெடுத்து கல்லணை கட்டிய மாவீரன் கரிகாலன் விருந்தோம்பல் செய்வதிலும் சிறப்பானவன் என்பதற்கு கடந்த கட்டுரையின் பாடலும் இந்த கட்டுரையின் பாடலும் சிறந்த உதாரணங்கள் ஆகும். பொருநாறாற்றுப்படை முடத்தாமக்கண்ணியார் என்ற புலவரால் பாடப்பட்டதாகும், பத்துப் பாட்டில் ஒன்றாகும்.
கரிகால மன்னனிடம் விருந்தோம்பல் உபசரிப்பு பெற்றவர்கள் எவ்வாறு உணர்வார்கள் என்பதை முடத்தாமக்கண்ணியார் எழுதியிருந்த பாடலை கடந்த தொடரில் பார்த்தோம். அதில், ஒரு வரியைப் படிக்கும்போது சிலிர்த்து போனதாக சிலர் சொன்னார்கள், உள்ளம் மகிழ என்றும், உச்சி குளிர என்றும் நாம் கேட்டிருக்கிறோம்; சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் மனம் குளிர மட்டுமல்ல உடலில் எலும்பு குளிரும் அளவிற்கு விருந்தோம்பல் செய்தான் கரிகால் பெருவளத்தான் என்ற வாசகத்தை கண்டு இலக்கியத்தின் பெருமையை சிலாகித்த நண்பர்கள் சிலர் மகிழ்வாக நம்மிடம் கருத்து தெரிவித்தனர்.
இன்றைய கட்டுரையும் கரிகாலனின் விருந்தோம்பலைப் போற்றும் இன்னொரு பாடலாகும். தன்னைக் காண வருபவர்களை, விருந்தினரை அவன் எவ்வாறு உபசரித்தான் என்பதை “பல்லே கொல்லை உழுகொழு ஏய்ப்ப எல்லையும் இரவும் ஊன்தின்று மழுங்கி” என்கிறார் ஒரு பொருநர். தன்னிடம் வந்த விருந்தினரை, வந்த நாள் முதல் திரும்பிச் செல்லும் வரை, இரவும் பகலும் அவர்கட்டு பிடித்த அசைவ உணவான கொழுப்புடைய கறியை உணவளித்துக் கொண்டே இருப்பானாம். பகலும் இரவும் மூச்சுக்காற்று கூட உள்ளே இடம் கொடுக்க முடியாத அளவுக்கு அவன் கொழுப்புடைய கறியை விருந்தோம்பல் செய்து உபசரித்தான் என்கிறது இப்பாடல்,
தொடர்ந்து இந்த இறைச்சியை உண்டதால பல் தேய்ந்து போகும் அளவிற்கு உணவு உண்டனராம். “பல்லே கொல்லை உழுகொழு ஏய்ப்ப எல்லையும் இரவும் ஊன்தின்று மழுங்கி”என்கிறார். நிலத்தை உழுது உழுது தேய்ந்து போன ஏர்முனை போல ஊன் தின்று தின்று பற்கள் தேய்ந்து போய்விட்டன என்கிறார் புலவர். இப்படித் தன்னைத் தேடி வந்த அனைவரையும் விருந்தோம்பல் செய்த கலாச்சாரம் நம் கலாச்சாரம். நம்மை பார்க்க வருபவர்களை உளமார மனம் மகிழ உபசரித்து நாம் அவர்களுக்கு விருந்தோம்பல் செய்து நம் கலாச்சாரத்தை பாரினில் பறைசாற்றுவோம்.
தொகுப்பாளர் தமிழூர் - கபிலன்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision