திருச்சி என்.ஐ.டிக்கு வந்து தான் ஹிந்தி கற்றுக்கொண்டேன்- நிதியமைச்சர் பேச்சு
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NIT) படித்து சாதனை படைத்துள்ள முன்னாள் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா என்.ஐ.டி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பி.டி.பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் படித்த முன்னாள் மாணவர்கள் 17 பேருக்கு சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டது.
இதில் முன்னாள் மாணவர் என்ற அடிப்படையில், தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு, பொது நிர்வாகத்துறையின் சாதனையாளர் என்ற விருது வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தேசிய தொழில் நுட்ப கழகத்தின் இயக்குனர் அகிலா, இந்திய தொழில்நுட்ப மேலாண்மை கழகத்தின் இயக்குனர் பவன்குமார் சிங், முன்னாள் மாணவர் சங்க தலைவர் மகாலிங்கம், தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் தலைவர் பாஸ்கர் பட் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அப்போது பேசிய நிதியமைச்சர்...
நான் பொது நிர்வாகத்துறையில் சிறப்பாக செயல்பட்டதாக கூறி இந்த விருதினை எனக்கு வழங்கியுள்ளார்கள். என்னை பொறுத்தவரை இந்த விருது இன்னும் சில ஆண்டுகள் கழித்து எனக்கு வழங்கப்பட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.
வங்கி துறையில் நான் சில விஷயங்களை சாதித்து இருந்தாலும் கூட , இப்போது நான் அந்ததுறையில் இல்லை.நான் பொது நிர்வாகத்துறைக்கு வந்து சில மாதங்களே ஆகின்றன. இந்த நிலையில்... இன்னும் சில ஆண்டுகள் கழித்து இந்த விருது எனக்கு வழங்கப்பட்டிருந்தால் அது பொருத்தமானதாக இருந்திருக்கும்.
கல்வி நிறுவனங்களை பொறுத்தவரை பல தனி நபர்கள் வந்து செல்வார்கள். ஆனால் அவர்கள் அங்கு விட்டுச் செல்லும் மதிப்பும், திறமையும் எந்நாளும் நிலைத்து நிற்கும். நான் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு இங்கு (NIT) வந்த பிறகு தான் பரந்த எண்ணம் எனக்கு கிடைத்தது. பல மாநிலங்களைச் சேர்ந்த, பல்வேறு மொழி பேசும் மாணவர்கள் இங்கு படித்துவந்தனர். இங்கு வந்த பிறகுதான் நான் ஹிந்தி பேச கற்றுக் கொள்ள தொடங்கினேன் என குறிப்பிட்டார்.
வெற்றிக்கு நிறைய அளவுகோல்கள் உள்ளன. வெற்றிக்கான இலக்கு சுய இலாபத்தினை தாண்டியதாக இருந்தால், வெற்றி தானாக வந்துசேரும் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO