திருச்சியில் பெண் வழக்கறிஞர் சாலையில் நாற்காலி போட்டு அமர்ந்து போராட்டம்
திருச்சி மாநகராட்சியில் 56வது வார்டில் உள்ளது சாஸ்திரி ரோடு ஏழாவது வடக்கு விஸ்தரிப்பு பகுதி. இப்பகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றது. தற்பொழுது வீடுகளில் இருந்து பிரதான பாதாள சாக்கடை பாதைக்கு குழாய்களை பதிக்கும் பணி நடைபெற வேண்டும்.
அப்பணிகள் நடைபெறாமல் சிமெண்ட் சாலைகள் போடுவதற்காக இன்று இயந்திரங்கள் வந்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மூத்த பெண் வழக்கறிஞர் ஜெயந்தி ராணி தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் கொடுத்து இருந்தார். வீடுகளில் இருந்து பழைய பாதாள சாக்கடை குழாய்களில் இணைப்புகளை கொடுக்க வேண்டாம். ஏனென்றால் புதிய பாதாள சாக்கடை பாதையில் வீடுகளில் இருந்து வரும் கழிவு நீரை கலப்பதற்கு இணைக்க வேண்டும். அப்பொழுதுதான் கழிவு நீர் வெளியேறும் நிலை ஏற்படாது என தொடர்ந்து வலியுறுத்தினார்.
இதனை கண்டு கொள்ளாமல் மாநகராட்சி அதிகாரிகள் இன்று சிமெண்ட் சாலை போட முயற்சித்த பொழுது தனியாக வாகனத்திற்கு முன்னதாக நாற்காலி போட்டு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து பெண் வழக்கறிஞரிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். பாதாள சாக்கடை புதிய பாதையில் வீடுகளில் இருந்து வரும் கழிவுநீரை ஜங்ஷன் பாயிண்ட் அமைத்து இணைப்பு கொடுக்கப்படும் என்று உறுதியளித்த பிறகு போராட்டத்தை கைவிட்டார். சாலை போடவில்லை என்று மக்கள் ஒருபக்கம் போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் இங்கே 35 ஆண்டுகளுக்குப் பிறகு அப்பகுதியில் சிமெண்ட் சாலை போடப்படும் முறையாக பாதாள சாக்கடை பணிகளை முடித்து விட்டு சிமெண்ட் சாலை போட்டு தரலாம் என பெண் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.