திருச்சி அரசு பள்ளியில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை

திருச்சி அரசு பள்ளியில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக பல அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பல பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் சேர்ப்பதை தவிர்த்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தங்களுடைய குழந்தைகளை சேர்த்து வருகின்றனர். இதனால் சுமார் 5 லட்சம் மாணவர்கள் கடந்த ஆண்டு கூடுதலாக சேர்க்கப்பட்டனர்.

இந்த நிலையில் கொரானா இரண்டாம் அலை தமிழகத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஏப்ரல் மாதத்தில் நடைபெற வேண்டிய மாணவர் சேர்க்கை பாதிக்கப்பட்டது. தற்போது  அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஜூன் மாதம் 14ஆம் தேதி முதல் தொடங்கிட பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.
உத்தரவைத்தொடர்ந்து பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊழியர்கள் வந்து மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டு உள்ளனர். திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 73 பள்ளிகள் உள்ளது. 50 அரசு பள்ளிகள் 23 அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

கிட்டத்தட்ட கடந்த 3 ஆண்டுகளாக முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தொடர்ந்து மாணவர் எண்ணிக்கையானது அரசு பள்ளிகளில் கூடி வருவது என்பது வியக்கத்தக்க ஒன்று. திருச்சி மாவட்டம், மணப்பாறை கல்வி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், எடமலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சேர்க்கை தொடங்கி மூன்றே நாட்களில் 100வது மாணவர் சேர்க்கை நடைபெற்றது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதல் வகுப்பில் 100 மாணவர்களுக்கு மேல் சேர்க்கை நடைபெறுவது பாராட்டிற்குரியது.

2016ல் 366 ஆக இருந்த மாணவ சேர்க்கை எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து கடந்த ஆண்டு 563 என்ற எண்ணிக்கையில் இதுவரை மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இந்த ஆண்டு பள்ளியில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 700 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணிகண்டம் ஒன்றியம் வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம் கூறுகையில்... கல்வியின் தரம் மற்றும் ஆசிரியர்களின் கனிவான கவனிப்புமே அந்தப் பள்ளிக்கூடத்தை பெற்றோர்கள் தேர்வு செய்வதற்கான முக்கிய காரணம்.

இந்த பள்ளியில் இன்னும் பல ஆயிரம் மாணவர்கள் கண்டிப்பாக இணைந்து கல்வி கற்பார்கள் என்பதில் ஐயமில்லை. சிறந்த பள்ளிக்கான வரிசையில் இந்த பள்ளியை இடம் பெறச் செய்வதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அனைவரின் பங்கும் அளப்பரியது என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF