திருச்சி மாநகர காவல்துறை சார்பில் குழந்தைகளுக்கு சுதந்திர தினவிழா போட்டிகள்!
74 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்சி மாநகர காவல்துறை சார்பில் குழந்தைகளுக்கு இணையவழி போட்டிகளை அறிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றால் ஊரடங்கு அமலில் உள்ள இத்தருணத்தில் மாணவ மாணவிகள் குடும்பத்தினருடன் நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிக்கவும், அவர்களுடைய திறமையை வெளிக் கொணரவும் திருச்சி மாநகர காவல்துறை சார்பில் இணையவழி பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளை நடத்தவுள்ளது.
இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ மாணவிகள் தங்களுடைய படைப்புகளில் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை குறிப்பிட்டு 96262 73399 என்ற தொலைபேசி எண்ணிற்கு வாட்ஸ்அப் மற்றும் coptrc@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கே.ஜி முதல் 5ம் வகுப்பு வரை "கொரோனா விழிப்புணர்வில் குழந்தைகளின் பங்கு" என்ற தலைப்பிலும், 6 முதல் 9ம் வகுப்பு வரை "கொரோனா தடுப்பில் களப்பணியாளர்கள்" என்ற தலைப்பிலும், 10 முதல் 12ம் வகுப்பு வரை "ஊரடங்கில் மாணவர்களின் பயனுறு பொழுதும் பணியும்" என்ற தலைப்பிலும் பேச்சு மற்றும் ஓவியப் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களின் பெயர் முகவரி மற்றும் தொலைபேசி எண் அடங்கிய படைப்புகளை பதிவேற்றம் செய்ய கடைசி நாள் 13/08/2020 மாலை 6 மணி ஆகும்.போட்டி முடிவுகள் சுதந்திர தினத்தன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும்.
இப்போட்டியின் விதிமுறைகளானது...
இப்போட்டியானது 4 பிரிவாக நடத்தப்படுகிறது. கே.ஜி யில் இருந்து 9ம் வகுப்பு வரை ஒரு பிரிவும், 2 முதல் 5ம் வகுப்பு வரை ஒரு பிரிவும், 6 முதல் 9ம் வகுப்பு வரை ஒரு பிரிவும், 10 முதல் 12ம் வகுப்பு வரை ஒரு பிரிவுமாக நடத்தப்படுகிறது.இப்போட்டிகள் இணைய தளத்தில் நடத்தப்பட உள்ளது. பேச்சுப் போட்டிக்கான நேரம் மூன்று நிமிடங்கள் மட்டுமே. கலந்து கொள்ளும் மாணவ மாணவியர் தமிழ் மொழியில் பேசவேண்டும். கருத்து வெளிப்பாடு, பிழை இல்லாமல் பேசுவது ஆகியவற்றின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஓவிய போட்டியாளர்கள் தங்களது படைப்புகளை A3 வெள்ளை நிற தாள் அல்லது ஷார்ட் தாளில் வரைந்து வண்ணம் தீட்டி மொபைலில் உள்ள ஸ்கேனர் செயலின் மூலம் ஸ்கேன் செய்து இமேஜ் பைலாக பதிவிட வேண்டும். பேச்சு போட்டியாளர்கள் தங்களது கொடுக்கப்பட்ட தலைப்பில் மூன்று நிமிடங்களுக்கு மிகாமல் பேசுவதை வீடியோ பைலாக பதிவு செய்து அனுப்ப வேண்டும். போட்டியில் முதல் பரிசு, இரண்டாம் பரிசு மற்றும் மூன்றாம் பரிசு என மூன்று பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
நடுவரின் தீர்ப்பே இறுதியானது. போட்டியில் பங்கு கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. பரிசு பெற்றவர்களின் படைப்புகள் திருச்சி மாநகர காவல் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டு பெருமைப்படுத்த படுவார்கள் எனவும் மாணவர்கள் பங்கேற்று பயனடைய திருச்சி மாநகர காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.