மத்திய கூட்டுறவு வங்கியில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு ரத்து செய்யப்பட்டது தெரியாததால் திருச்சியில் ஏராளமானவர்கள் குவிந்ததால் பரபரப்பு.
திருச்சி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்,ஓட்டுநர் மற்றும் இரவு காவலர் பணியிடங்களுக்கு கடந்த ஜீன் மாதம் அறிவிப்பு வெளியானது. இதில் மொத்தம் 29 பணியிடங்களுக்கு திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 17 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். பின்னர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முக தேர்வு அழைப்பானையை தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும்,01.12.2020 தேதி முதல் 14.12.2020 வரை குறிப்பிட்ட நேரம் ஒதுக்கீட்டு நேர்முக தேர்வு செய்யப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து நிவர் புயல் காரணமாக இந்த நேர்முக தேர்வு ரத்து செய்யப்படுவதாக கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அறிவித்திருந்தார். இதனை செய்திதாள்கள் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேர்முக தேர்வு ரத்து செய்யப்பட்டது குறித்து தகவல் முழுமையாக தெரியாததால் ஏராளமான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்படிருந்த திருச்சி தில்லை நகரில் உள்ள மக்கள் மன்றத்திற்கு வந்திருந்தனர். அதனை தொடர்ந்து இங்கு இருந்த கூட்டுறவு துறை அதிகாரிகள் நேர்முக தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் இது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என கூறினார். இதனால் நேர்முக தேர்விற்கு வந்த விண்ணப்பதாரர்கள் ஏமாற்றத்துடன் காத்திருந்தனர்.
இதற்கிடையில் நேர்முகத்தேர்வுக்கு கைக்குழந்தையுடன் வந்த பெண் ஒருவர் கூறுகையில் நான் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து இருந்தேன். எனக்கு இன்று நேர்முகத்தேர்வு நடைபெறும் என அழைப்பானை வந்திருந்தது. இங்கு வந்த பிறகு தான் நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்பட்டு இருப்பது எனக்கு தெரியவந்தது. மேலும் தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து எந்த கடிதமும் எனக்கு கிடைக்கப்பெறவில்லை.
இதுகுறித்து தொலைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தால் எனக்குத் தகவல் தெரிந்திருக்கும். தற்போது நான் நேர்முகத்தேர்வுக்கு வந்து ஏமாற்றம் அடைந்துள்ளேன் என தெரிவித்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய