ராணுவ வீரர் மனைவியிடம் தாலி சங்கிலி பறித்த நபர் 4 மாதங்களுக்கு பிறகு கைது
திருச்சி மாவட்டம் முசிறி அருகே பேரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நீலமேகம். இவரது மனைவி கலைவாணி நீலமேகம் காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பேரூர் கிராமத்தில் கடந்த 27.04.2022 தேதி அன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கலைவாணியிடம் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கலியை பறித்துக் கொண்டு மர்ம நபர் தப்பி ஓடினார். இது குறித்து தகவல் அறிந்த கலைவாணியின் கணவர் நீலமேகம் காஷ்மீரில் இருந்து வாட்ஸப் வாயிலாக தன் குடும்பத்திற்கு பாதுகாப்பு வேண்டும் என பேசி வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ வைரலானது.
தாலி சங்கிலி பறிப்பு குறித்து கலைவாணி ஜம்புநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். இதையடுத்து தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு ராணுவ வீரர் நீலமேகம் மற்றும் கலைவாணியிடம் காவல்துறை உரிய பாதுகாப்பு கொடுக்கும், அதே வேலை குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்து இருந்தார். இந்நிலையில் கலைவாணியிடம் தாலிசங்கிலி திருட்டில் ஈடுபட்ட நபர் வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பது புலன் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து திருச்சி நீதிமன்றத்தின் வழியாக தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த மணிகண்டன் என்கின்ற கண்ணன் (40) என்பவரை ஜெம்புநாதபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி போலீஸ் காவலில் எடுத்தார். பின்னர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் மணிகண்டன் (எ) கண்ணன் ,பேரூர் கிராமத்தில் ராணுவ வீரர் மனைவி கலைவாணியிடம் தாலி சங்கிலி பறித்துச் சென்றதை ஒப்புக்கொண்டார். பின்னர் தொட்டியத்தில் மணிகண்டனுக்கு சொந்தமான மற்றொரு வீட்டின் பின்புறம் புதைத்து வைத்திருந்த ஐந்து பவுன் தங்க கட்டியை எடுத்துக் கொடுத்தார்.
தங்க கட்டியின் மதிப்பு ஐந்து பவுன் ஆகும். கலைவாணியிடம் பறித்த தாலி சங்கலியை நாமக்கல் கொண்டு சென்று உருக்கி கட்டியாக மாற்றியதும் தெரிய வந்தது. திருச்சி, தஞ்சை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மணிகண்டன் (எ) கண்ணன் மீது வழிப்பறி, திருட்டு, அடிதடி, உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO