டெல்டா மாவட்ட பாசனத்துக்கு கல்லணை திறந்த அமைச்சர்கள்

டெல்டா மாவட்ட பாசனத்துக்கு கல்லணை திறந்த அமைச்சர்கள்

டெல்டா மாவட்ட பாசனத்திற்காக , நேற்று, கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு, காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, கடந்த 24ம் தேதி, மேட்டூர் அணையிலிருந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

இந்த தண்ணீர், நேற்று, தஞ்சாவூர் மாவட்ட எல்லையான கல்லணைக்கு வந்தடைந்தது. 
இதை தொடர்ந்து அணையில் உள்ள  ஆஞ்சநேயர், ஆதிவிநாயகர், கருப்பண்ண சுவாமி கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.பின்னர், மேள தாளம் முழங்க, நீர் வழங்கல் துறை அமைச்சர் நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர்  மகேஷ், மற்றும் டெல்டா மாவட்ட கலெக்டர்கள், பொதுப்பணி துறை அலுவலர்கள், விவசாயிகள் மலர்கள், நெல்மணிகள் துாவி தண்ணீரை திறந்து வைத்தனர்.

முதல்கட்டமாக, காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆறுகளில், தலா 500 கன அடியும், கல்லணை கால்வாயில் 100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  தண்ணீர் வரத்தை பொருத்து தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதன் மூலம், தஞ்சாவூர் 1.11 லட்சமும், திருவாரூர் 93 ஆயிரம், நாகை 19,700, மயிலாடுதுறை 86,500, கடலூர் 27,700, அரியலூர் 2,500 என 3.38 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது, என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பின்னர் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, நிருபர்களிடம் கூறிய போது.....
கல்லணையின் கீழ் பகுதியில் 3.38 லட்சம் ஏக்கரிலும், மேட்டூரின் கீழ்பகுதியில் 5.21 ஏக்கரிலும் சாகுபடி செய்யப்பட உள்ளது. கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் 924 ஏரிகள் நிரப்பப்பட உள்ளது. ஆகஸ்ட் மாதம் 400 ஏரிகளுக்கு தண்ணீர் வழங்கப்பட உள்ளது. கடைமடைக்கு காவிரியில் தண்ணீர் சென்ற பிறகு, 36 ஆறுகளிலும் தண்ணீர் திறக்கப்படும். சம்பிரதாயமாக கல்லணை கால்வாயில் 100 கன அடி மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. கல்லணை கால்வாய், வடவாறு போன்றவற்றில், கட்டுமானப் பணிகள் பத்து நாள்களில் முடிவடையும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் முழுமையாக திறக்கப்படும். குறுவை சாகுபடிக்கு தேவையான நெல் விதைகள், உரங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் தங்கு தடையின்றி கிடைக்கும். 3.38 லட்சம் ஏக்கர் பரப்பளவு என்பதே கடந்த ஆண்டை விட கூடுதலாக உள்ளது. விவசாயிகளை பாதிக்காத வகையில் தேவைக்கு ஏற்ப தண்ணீர் திறக்கப்படும். தென்மேற்கு பருவ மழை குறையாது என்ற பெரிய நம்பிக்கை உள்ளது. இந்த ஆண்டு சாகுபடிக்கு  தண்ணீர் பிரச்னை இருக்காது. கடந்த காலங்களில் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்காமல் காலம் தாழ்த்தி தண்ணீர் திறக்கப்பட்டதால், வீணாக கடலில் கலந்தது. தண்ணீரை கொண்டு, படிப்படியாக அனைத்து ஏரிகளும் நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

வழக்கமாக கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு,  நான்கு ஆறுகளிலும் சேர்த்து மொத்தம் 20 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்படும்.ஆனால், இந்த ஆண்டு, கல்லணைக்கு போதுமான நீர் இருப்பு வந்து சேருவதற்கு முன்னதாகவே, தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.மேட்டூர் அணையில் கடந்த 24ம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர், இன்னும் முழுமையாக வந்து சேராத நிலையில், கல்லணை கால்வாயில் 100 கன அடி தண்ணீர் சேர்த்து, 1,600 கன அடி மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. 
இதனால் டெல்டா பாசனத்துக்கு திறக்கும்போது கல்லணையில் இருந்து, தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதை காண முடியவில்லை. வெறும் சம்பிரதாயத்துக்காக,  தண்ணீர் திறப்பு நடந்தது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO