திருச்சியில் 1500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம் - போக்குவரத்து பாதிப்பு
மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கூடாது, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று ஒரு நாள் அகில இந்திய வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
அந்த வேலை நிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சியில் தொ.மு.ச, ஏ.ஐ.டி.யூ.சி, சி.ஐ.டி.யூ, ஐ.என்.டி.யூ.சி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கம் சார்பில் திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதனையடுத்து போராட்டக்காரர்கள் அனைவரும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சுமார் 700 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து மீதமிருப்பவர்களை கைது செய்ய வாகனங்கள் வராததால் அரை மணி நேரம் அனைவரும் காத்திருந்தனர். அதனை தொடந்து வாகனங்கள் வந்த பின்பு அனைவரையும் கைது செய்தனர். அந்த போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் செல்லாத வகையில் சாலையின் நடுவே தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டன. பின்னர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. இதனால் மெயின்கார்டுகேட் சாலை வெறிச்சோடி காணப்பட்டது. போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் மத்திய அரசை கண்டித்து பாடல்களை பாடி எதிர்ப்பு தெரிவித்தனர்.