திருச்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களில் கொலை வழக்குகள் குறைந்துள்ளது

திருச்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களில் கொலை வழக்குகள் குறைந்துள்ளது

திருச்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களிலும் கடந்த 2021ம் ஆண்டு 254 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது 2020ம் ஆண்டு மத்திய மண்டலத்தில் நிகழ்ந்த 272 கொலை வழக்குகளுடன் ஒப்பிடுகையில் 2021ம் ஆண்டில் கொலை வழக்குகள் குறைந்துள்ளது. 8 சதவீதம் ரவுடிகள் மீது எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கையின் காரணமாக ரவுடிகள் ஈடுபட்டுள்ள கொலை வழக்குகள் 2020ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மொத்தம் 9 வழக்குகள் குறைந்து 2021ம் ஆண்டில் 18 கொலை வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது.

மேலும் 2021ம் ஆண்டில் பதிவான 254 கொலை வழக்குகளில், குடும்பப் பிரச்சினை காரணமாக 86 கொலை வழக்குகளும், குடிபோதை வாய்த்தகராறு காரணமாக 70 கொலை வழக்குகளும் மற்றும் நிலத்தகராறு உள்ளிட்ட பிற காரணங்களுக்காக 78 கொலை வழக்குகளும் பதிவாகி உள்ளன. நடப்பு 2022ம் ஆண்டில் மத்திய மண்டலத்திற்குட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகளின் நடவடிக்கைகளை முற்றிலுமாக ஒடுக்கவும், கொலைச் சம்பவங்களை தடுக்கவும், குறிப்பாக ரவுடிகள் சம்பந்தமான கொலை வழக்குகள் மத்திய மண்டலத்தில் நிகழாமல் தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு காவல்நிலைய எல்லைப்பகுதியிலும் ரவுடிகளின் நடமாட்டம் மற்றும் செயல்பாடுகள் காவல்துறையின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு அவர்கள் மீதான நிலுவையில் உள்ள வழக்குகளில் விரைந்து தண்டனை பெற்றுத் தர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சட்டம் ஒழுங்கை சிறந்த முறையில் பேணிப் பாதுகாக்க, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/LFNwwZ6K29zAPpD8WoDIQc

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn