திமுக பாணியில் அடிக்க வேண்டும் - திருச்சியில் அண்ணாமலை பேச்சு

திமுக பாணியில் அடிக்க வேண்டும் - திருச்சியில் அண்ணாமலை பேச்சு

திருச்சி மாவட்டம், முசிறி தொகுதியில், நேற்று பா.ஜ., கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, ‘என் மண், என் மக்கள்’ என்ற பிரச்சார பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அண்ணாமலை.... காவிரி படுகையில் இருக்கும் 2000 ஆண்டுகள் பழமையான முசிறியில் பிரதானமாக இருக்கும் விவசாயத்தை பாதுகாக்கவும், விவசாய பொருட்களை பதப்படுத்தக் கூடிய தொழிற்சாலை எதுவும் இங்கு வரவில்லை. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு தகுந்த விலை கிடைக்கவில்லை.  மத்திய அரசு, விவசாயிகளுக்காக, 48 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில் திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. ‘நான் டெல்டாகாரன்’ என்று சொல்லும் முதல்வரிடம், விவசாயத்துக்கு சம்பந்தம் இல்லாத செயல்பாடுகள் தான் உள்ளது. கர்நாடகாவுக்கு சென்று முதல்வரை சந்தித்த தமிழக முதல்வர், காவிரி நதிநீர் பிரச்னையை விட முக்கியமான விஷயம் பேசியதாக, பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

பா.ஜ., கட்சியின் கனவு பெரியது. கிராமப்புறங்களில் இருந்து மக்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். கிராமப்புறங்களும், விவசாயமும் வளர்ச்சி பெற வேண்டும் என்பதே பா.ஜ., கட்சியின் நோக்கம். பால் உற்பத்தியாளர்களுக்கு பயனளிக்கும் ஆவின் நிர்வாகத்திலும், தி.மு.க., அரசு கை வைத்து விட்டது. டாஸ்மாக் நிர்வாகம் மட்டும் சிறப்பாக உள்ளது. மக்களை குடிகாரர்களாக்கி, வளர்ச்சியை தடுப்பதோடு, வரிப்பணத்தை சூறையாடிக் கொண்டிருக்கிறது. தி.மு.க., அவர்களின் பாணியில் திருப்பி அடித்தால் தான் உரைக்கும். நாம் ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டிக் கொண்டிருக்கிறோம்.

அவர்களுக்கு அது புரியாது. காமராஜரையே ஊழல் குற்றச்சாட்டு சொல்லி, 1961 தேர்தலில் தோற்கடித்த தி.மு.க.,வினர் எந்த வகையிலும் பொய் சொல்ல தயங்க மாட்டார்கள். அதனால், தி.மு.க., பாணியிலேயே களையெடுத்து, தமிழகத்தை சுத்தப்படுத்த களம் இறங்கி இருக்கிறோம்.  முசிறிக்கு கொடுத்த 5 தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றாமல், தமிழக முதல்வர், பொய்யை சொல்லிக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் மிகவும் பின் தங்கிய தொகுதியாக இருப்பதை, வளர்ச்சி பெற்ற தொகுதியாக்க, பா.ஜ., வேட்பாளரை எம்.பி.,யாக்க வேண்டும். 

உண்மையிலேயே, தமிழகத்தில் ஒரு கட்சி இருக்கக் கூடாது என்றால், அது தி.மு.க., தான். ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததால் தான், கும்பாபிேஷகம் நடக்குது, மழை பெய்கிறது, சூரியன் கிழக்கில் உதிக்கிறது, என்றெல்லாம் அமைச்சர் சேகர்பாபு சொல்கிறார். இதையெல்லாம், நாம் கேட்க வேண்டும் என்பது சாபக்கேடு. தி.மு.க., ஹிந்துக்களுக்கு மட்டுமல்ல அனைத்து சமுதாயத்துக்கும் எதிரி தான். அதனால், அரசியல் சரித்திரத்தை மாற்றி சுத்தமான அரசியலை கொண்டு வருவோம். ஏழை சமுதாயம் இருக்கக் கூடாது என்ற தொலை நோக்கு பார்வையோடு இளைஞர்களையும், பெண்களையும் மையமாக வைத்து அரசியல் நடத்துவோம் என தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision