திருச்சியில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்
கேலோ இந்தியா விளையாட்டில் மல்லா் கம்பம் போட்டிகள் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை(இன்று) முதல் தொடங்கவுள்ளது.
நான்கு நாள்கள் நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டியில் தமிழகம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா், ஒடிஸா, குஜராத், ஜாா்க்கண்ட், தெலங்கானா, ஆந்திரம், உத்தரகண்ட் உள்ளிட்ட 16 மாநில அணிகள் பங்கேற்க உள்ளன. இதற்காக திருச்சி அண்ணா உள்விளையாட்டரங்கில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதில், தமிழக அணியில் ஆண்கள் பிரிவில் ஆா். அமிா்தீஷ்வா், ஆா். தியோதத், பாலாஜி, எஸ். விஷ்ணுபிரியன், பி. சுதேஜாஸ் ரெட்டி, கே.வி. ரோகித் சாய்ராம் ஆகிய 6 பேரும், மகளிா் பிரிவில் எஸ். சஞ்ஜனா, இ. பிரேமா, வி. மதிவதனி, வி. சங்கீதா, எம். மேகனா, கே. பூமிகா ஆகிய 6 பேரும் களமிறங்குகின்றனா்.
இதற்கு முன்னா் நடைபெற்ற கேலோ இந்தியா மல்லா் கம்ப விளையாட்டுப் போட்டிகளில் தமிழக அணி இரு பதக்கங்களை வென்றுள்ளது. தற்போது சொந்த மண்ணில் நடைபெறுவதால் கூடுதல் பதக்கங்கள் கிடைக்கும் என்ற களமிறங்குகிறோம் என தமிழ்நாடு மல்லா் கம்பம் அணியின் பயிற்சியாளா் மல்லஞ்சி ஆதித்தன் தெரிவித்துள்ளாா்