தேசிய கிராமிய மகளிர் தினம் - வேளாண்மையில் மகளிரின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கு
கிராமப்புற மகளிரின் உழைப்பிற்கு அங்கீகாரம் தரும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 15ஆம் தேதி 'தேசிய கிராமிய மகளிர் தின'மாக அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிர் இயல் துறை, கிரியா அறக்கட்டளை, ஜமால் முகமது கல்லூரி, திருச்சி அகில இந்திய வானொலி நிலையம் இணைந்து நடத்திய 'வேளாண்மையில் மகளிரின் பங்கு' என்ற தலைப்பிலான ஒருநாள் கருத்தரங்கு திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த ஜமால் முகமது கல்லூரி உதவி செயலர் முனைவர் கே.அப்துஸ் சமது, வேளாண்மையில் மகளிர் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியா உணவு உற்பத்தியில் வரும் காலத்தில் இன்னும் சாதிக்க மகளீரின் பங்கு உறுதுணையாக அமையும் . பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்' என்றார். ஜமால் முகமது கல்லூரி துணை முதல்வர் முனைவர் ஜார்ஜ் அமலரத்தினம், அகில இந்திய வானொலி திருச்சிராப்பள்ளி பண்ணை இல்ல ஒலிபரப்பு நிகழ்ச்சி அலுவலர் எஸ் ஜான்சன் வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்புரை வழங்கிய கருத்தரங்கு அமைப்பு செயலர்மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிர் இயல் துறை இயக்குனர் முனைவர் என் .முருகேஸ்வரி, வேளாண்மையில் பணியாட்கள் தேவையினை 42 சதவீதம் பூர்த்தி செய்வது கிராமபுற பெண்கள் தான். வேளாண்மை பயிர் சாகுபடியில் 75% பணிகளையும் தோட்டக்கலை பயிர் சாகுபடியில் 79 சதவீத பணிகளையும் கால்நடை வளர்ப்பில் 95 சதவீத பணிகளையும் பெண்கள் செய்தாலும், ஆண்களுக்கு தரப்படும் ஊதியத்தில் ஏறக்குறைய 60% தான் பெண்களுக்கு ஊதியமாக தரப்படும் சூழல் இருப்பதை சுட்டி காட்டினார்.
கருத்துரை வழங்கிய திருச்சி கிரியா அறக்கட்டளை நிறுவனர் முனைவர் கே.சி.சிவபாலன் பேசும் போது குடும்பத்தில் ஆண் உறுப்பினர்களின் குறுக்கீடு, நில உரிமை, முடிவெடுக்கும் சுதந்திரம் இல்லாதது போன்ற காரணங்களால் வேளாண்மையில் ஈடுபடும் பெண் விவசாயிகள் சிக்கல்களை சந்திக்கிறார்கள். அது பெண் விவசாயிகளின் பொருளாதார நலனை பாதிப்பதோடு நாட்டின் ஒட்டுமொத்த விவசாய உற்பத்தியும் பாதிக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, ஆண்களைப் போலவே பெண்களுக்கும் உற்பத்தி வளங்களை அணுகும் சூழல் உருவானால அவர்கள் தங்கள் பண்ணைகளில் விளைச்சலை 20-30% அதிகரிப்பார்கள். இது குறைந்தபட்சம் வளரும் நாடுகளில் 2.5-4% வரை வேளாண்மை உற்பத்தியை அதிகரிக்கும் என்று மதிப்பிடபட்டுள்ளது என்றார்.
அடுத்து பேசிய திருச்சி வேளாண்மை விற்பனை மற்றும் வணிக துறையின் துணை இயக்குனர் எஸ். சரவணன் 'வேளாண்மையில் பெண்கள் வெறும் சாகுபடியில் மட்டும் கவனம் செலுத்தாமல் மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் போது முழுமையான லாபம் கிடைக்கு, வருடம் முழுவதும் வேலை வாய்ப்பு உருவாகும். வேளாண்மை தொடர்பான தொழில்களை துவங்க வேளாண்மை உள் கட்டமைப்பு திட்டம், உணவு மதிப்பு கூட்டு இயந்திரம் வாங்கிட மானிய திட்டம் என ஏராளமான திட்டங்கள் உள்ளன. அதை பெண்கள் பயன்படுத்தி கொள்ள முன் வர வேண்டும் என்றார்.
கருத்தரங்கில் கிராமிய பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகளின் அவசியம், பெண் தொழில் முனைவோருக்கான சிறப்பு வங்கி கடன் உதவி திட்டங்கள் , பெண்களுக்கான ஆரோக்கியம் மற்றும் சுகாதார கட்டமைப்பு உதவிகள் போன்ற தலைப்புகள் விவாதிக்கப்பட்டன. நிகழ்ச்சியில் சிறப்பாக வேளாண்மை மற்றும் கிராம முன்னேற்றத்திற்க்கு பாடுபடும் மயிலாடுதுறை மாவட்டம் , சீர்காழி வளநாடு தற்சார்பு வேளாண்மை உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல் அலுவலர் சுபாஷினி ஸ்ரீதர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் பள்ளத்திவிடுதி இயற்கை விவசாயி மனோன்மணி ஆகியோர் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.
தாவரவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் அகமது சமது வரவேற்றார். நிகழ்ச்சியில் 75 மேற்பட்ட மாணவ மாணவியர்கள், பேராசிரியர்கள்,பெண் தொழில் முனைவோர் , பெண் விவசாயிகள் ,வேளாண்மை அதிகாரிகள் கலந்து கொண்டனர். தாவரவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் அகமது ஷெரிப் வரவேற்றார். திருச்சி கிரியா அறக்கட்டளை விக்னேஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிர் இயல் துறை மற்றும் ஜமால் முகமது கல்லூரி தாவரவியல் துறை பேராசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision