மணப்பாறை அருகே திருநீர் கொடுத்து பெண்களை ஏமாற்றி பணம் சுருட்டல்- இருவர் கைது
மணப்பாறை அடுத்த சேர்வைக்காரன்பட்டியில் கிராமப்புற பெண்களிடம் திருநீர் கொடுத்து சுயநினைவு இழக்க செய்து பணம் பறித்த இருவரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் அருகே உள்ள சேர்வைக்காரன்பட்டியில் நுழைந்த இருவர் அங்குள்ள கிராமப்புற பெண்களிடம் வீரப்பூர் கோயிலில் அன்னதானம் நடத்துவதாகவும், தோஷங்கள் கழிப்பதாகவும் கூறி திருநீர் கொடுத்து, அவர்களை சுயநினைவு இழக்க செய்து ஏமாற்றி பணம் பறித்துள்ளனர். 4 வீடுகளில் பணம் பறித்த இருவரும் அங்கிருந்த தையலர் க.நாகராஜ்(37) என்பவரிடம் அன்னதானத்திற்கு போலியான நன்கொடை கேட்டு ரசீது கொடுத்து பணம் கேட்டு பெற்றுள்ளனர்.
பின் அவரிடம் திருநீர் அளித்துள்ளனர். திருநீர் பெற்ற நாகராஜ் சுயநினைவு இழந்து வீட்டில் இருந்த சம்பள தொகை ரூ.3500 முழுவதையும் அவர்களிடம் கொடுத்துள்ளார். சிறிது நேரத்திற்கு பிறகு சுயநினைவு பெற்ற நாகராஜ் பணம் இழந்ததையறிந்து திருநீர் அளித்தவர்களை தேடியபோது, அவர்கள் இருவரும் அடுத்த வீட்டில் வசூலில் இருந்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் திருநீர் அளித்து பணம் சுட்டிய இருவரையும் பிடித்து வைத்தனர். பின் அங்கிருந்து சுமார் 2 கிமீ தொலைவிற்கு அவர்களை கைகளை கட்டி ஊர்வலமாக அழைத்து வந்தனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், விராலிமலை அடுத்த அத்திப்பள்ளம் பகுதியினை சேர்ந்த அப்பாரு மகன் பாண்டி (50) மற்றும் நடராஜன் மகன் நல்லு (65) என்பதும், இருவரும்
இதேபோல் கிராம பகுதிகளுக்கு சென்று திருநீர், மை ஆகியவற்றை அளித்து பொதுமக்களிடம் பணம் சுருட்டி வருவதும் தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் காவல்நிலையம் அழைத்து சென்றனர். இச்சம்பவம் குறித்து நாகராஜ் அளித்த புகாரின்பேரில் புத்தாநத்தம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn