திருச்சியில் புதிய பல் மற்றும் ஆயுர்வேதா மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் - அமைச்சர் உறுதி
திருச்சி அரசு மருத்துவமனையில் ரூபாய் 12 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள உணர்வு ஒருங்கிணைப்பு மற்றும் சிகிச்சை பூங்கா, ரூபாய் 25 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சலவை இயந்திரத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்ரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் அறுவை சிகிச்சைகளை டிஜிட்டல் முறையில் சரி பார்க்கும் தொழில்நுட்பத்தை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தும் வகையில் துவக்கி வைத்து 32 படுக்கைகளுடன் கூடிய ECRP-II தீவிர சிகிச்சை பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
திருச்சி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசிய போது... அறுவை சிகிச்சைக்கான டிஜிட்டல் முறைகளை சரிபார்க்கும் தொழில்நுட்பத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக திருச்சி அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழக முழுவதும் 1649 டிஜிட்டல் முறைகளை சரிபார்க்கும் தொழில்நுட்பம் அமைக்கப்படும். விரைவில் திருச்சியில் பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும். இதற்கான சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிடப்படும்.வரும் நிதிநிலை அறிக்கையில் திருச்சியிலும் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.
திருச்சியில் 36 நகர்ப்புற வாழ்வு மையம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. 23 நகர்ப்புற வாழ்வு மையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 13 கட்டும் பணி நடைபெற்று வருகிறது. திருச்சி அரசு மருத்துவமனையில் சரிவர இயங்காத ஐந்து லிஃப்டுகளை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் பேசிய அவர்... திருச்சியில் 82 காது கேட்காத குழந்தைகளுக்கு சிகிச்சை நடைபெற்றுள்ளது. தற்போது அவர்களுக்கான உணர்வு பூங்கா திறக்கப்பட்டுள்ளது. பிரியா இறப்பு விவகாரத்தில் விசாரனை குழு விசாரித்து அறிக்கை அளித்தது, அதன் அடிப்படையில் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம்.
தமிழகத்தில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் அறுவை சிகிச்சை நடைபெறுகிறது . உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் எப்போதும் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். எல்லா நேரங்களிலும் தவறுகள் நடப்பதில்லை என குறிப்பிட்டார். 5430 அறுவை சிகிச்சை நிபுனர்களுக்கும் கையேடுகளை வழங்கி உள்ளோம். இந்தியாவில் இது போல் எங்கும் இல்லை என்றார். செக் லிஸ்ட் போர்டு என்கிற ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளோம். மருத்துவர்கள் என்ன என்ன உள்ளது என்பதை டிக் செய்ய வேண்டும் - இந்த செக் லிஸ்ட் டிஸ்பிளே போர்டு என்பது இந்தியாவிலேயே முதலாவதாக திருச்சியில் தான் திறந்து வைக்கப்பட்டுள்ளது என பெருமையுடன் குறிப்பிட்டர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் சட்டமன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO