அக்டோபர் 28 முதல் பால் நிறுத்த போராட்டம்
திருச்சியில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் திருச்சி மண்டல பொதுக்குழு கூட்டம் இன்று பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட 6 - மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன்.... ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லிட்டர் பசும்பால் 32 ரூபாயிலிருந்து 42 ரூபாயாகவும், எருமை பால் ஒரு லிட்டருக்கு 41 ரூபாயிலிருந்து 51 ரூபாயாக கொள்முதல் விலையை உயர்த்தி தரவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
மேலும் வரும் 26-ம் தேதிக்குள் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றுவது தொடர்பாக சங்கங்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், இல்லையென்றால் வரும் 28ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தொடர் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவர் அறிவித்தார்.
மேலும், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை சேலம், திருச்சி, ஈரோடு, மதுரை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகம் முன்பு கறவைமாடுகளுடன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
வைரஸ் தொற்று காலத்தில் அதிக அளவில் பாலை கொள்முதல் செய்த ஆவின் நிர்வாகம், தற்போது கொள்முதல் செய்யாமல் தனியார் பால் நிறுவனங்களுக்கு துணை போகும் வகையில் தற்போது பாலை கொள்முதல் செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
படிப்படியாக ஆவினில் இருந்து எங்களது பால் கைவிட்டுப் போய் கொண்டு இருக்கிறது... இந்த நிலை தொடரக்கூடாது என்பதற்காக தான் இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளோம். ஒரு நாளைக்கு 2 கோடி லிட்டர் ஆவினுக்கு வழங்க தயாராக உள்ளோம், ஆவின் உற்பத்தியாளர்களை அரசும் பால்வளத்துறையும் காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO