பாதுகாக்க வேண்டிய படித்துறையை பாழ்படுத்திய அதிகாரிகள்

16-ம் நூற்றாண்டின் இறுதியில் ராணி மங்கம்மாள் திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தபோது, காவிரியில் நீராடுவதற்காக சிந்தாமணி அருகே (இப்போது ஒயாமரி பாலம்) கட்டப்பட்டதுதான் இந்த படித்துறை.

சுமார் 300 ஆண்டுகள் கடந்துவிட்ட இந்த பழமையான படித்துறையை புனரமைத்து, தொல்லியல் சின்னமாக அறிவிக்க வேண்டும் என வரலாற்று பேராசிரியர்கள், தொல்லியல் ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் ஏற்கனவே அரசிடம் வலியுறுத்தி வந்த நிலையில், புதிதாக ஒரு கட்டிடம் கட்டுவதற்காக ராணி மங்கம்மாள் கட்டிய படித்துறையை திருச்சி மாநகராட்சி நிர்வாகம் இடித்துள்ளது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் வரலாற்று சின்னங்களை பாதுகாக்க முன்னுரிமை அளித்து வரும் நிலையில் திருச்சி மாநகராட்சியின் செயல்களால், இங்கு இருக்கக்கூடிய நினைவு சின்னங்களையும் இழக்கக்கூடிய நிலைக்கு திருச்சி மக்கள் தள்ளப்பட்டுள்ளோம்.

புதிதாக கட்டிடம் கட்ட அருகில் எவ்வளவோ இடம் உள்ளது. ஆனால், அதை விடுத்து பழமையான சின்னத்தை இடித்து, அதன்மீது புதிய கட்டிடம் கட்ட நினைப்பது ஏனோ?