திருச்சி அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற மனநலம் குன்றியோருக்கான மேம்படுத்தப்பட்ட மீட்பு சிகிச்சை மையம் திறப்பு

திருச்சி அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற மனநலம் குன்றியோருக்கான மேம்படுத்தப்பட்ட மீட்பு சிகிச்சை மையம் திறப்பு

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் இன்று புதிதாக தொடங்கப்பட்ட ஆதரவற்ற மனநலம் குன்றியவர்களுக்கான மேம்படுத்தப்பட்ட மீட்பு சிகிச்சை மையத்தினை மருத்துவமனை முதல்வர் மருத்துவர் K. வனிதா தொடங்கி வைத்து பேசியதாவது,

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் மனநல பிரிவு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கடலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் இப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் 200 முதல் 250 நபர்கள் மனநல சிகிச்சை பிரிவில் புற நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். 40 படுக்கை கொண்ட உள் நோயாளி பிரிவு உள்ளது. மனநல பிரிவில் மருந்து சிகிச்சை உளவியல் சிகிச்சை மின் அதிர்வு சிகிச்சை நோயின் தன்மைக்கு ஏற்ப அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழக முதல்வர் சட்டப்பேரவை அறிவிப்பின்படி, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் நிதியில் மனநல நோயாளிகளின் பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு இன்று புதிதாக தொடங்கப்பட்டுள்ள 10 படுக்கைகள் கொண்ட ( 5 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் பிரிவு) ஆதரவற்ற மனநல குன்றியவர்களுக்கான மேம்படுத்தப்பட்ட மீட்பு சேவை மையத்தின் மூலமாக தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவின்றி வீதிகளில் பொது இடங்களில் நடமாடும் நபர்களை அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள் மற்றும் 102 ஆம்புலன்ஸ் சேவை மூலமாக குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் பதிவு செய்தபின் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை ஆதரவற்ற மனநலம் குன்றியவர்களுக்கான மேம்படுத்தப்பட்ட மீட்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்படுவர்.

இங்கு மனநலம் குன்றியோருக்கான பராமரிப்பு, பரிசோதனை, உடல் ரீதியான சிகிச்சை மற்றும் சிறப்பு மனநல சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. சிகிச்சைக்குப் பின்னர் வீட்டு முகவரி கிடைத்தால் மனநலம் குன்றியவர் உறவினர்களுடன் சேர்த்து வைக்கப்படுவார் அல்லது அங்கீகரிக்கப்பட்ட மனநல இல்லத்தில் சேர்க்கப்படுவார். மாவட்ட மனநல திட்ட மருத்துவர்கள் மற்றும் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இச்சேவையில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். மனநலம் குன்றி ஆதரவின்றி வீதிகளில் நடமாடும் நபர்களை தன்னார்வலர்கள் அரசின் நெறிமுறைகளின்படி திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையின் இப்பிரிவில் சேர்ப்பதற்கு உறுதுணையாக இருந்திட வேண்டும் என்றார். மேலும் மூன்று வாரங்களுக்கு முன்பாக மருத்துவமனை முதல்வர் தலைமையில்

இணை இயக்குனர், காவல்துறையினர், சமூகநலத் துறையினர், மாவட்ட மனநல திட்ட மருத்துவர்கள், தன்னார்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் பங்கேற்ற இத்திட்டம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்றார். இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் பொறுப்பு மருத்துவர் M.S. முரளிதரன் மனநல சிகிச்சை துறை தலைவர் மருத்துவர் A.நிரஞ்சனா தேவி உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO