திருச்சியில் கிளிவேட்டை திருவிழா
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடைபெறும் அண்ணன்மார் தெய்வங்கள் என்றழைக்கப்படும் பொன்னர் - சங்கர் மாமன்னர்களின் மாசி பெருந்திருவிழாவில் வளநாட்டில் தங்கை அருக்காணி என்னும் தங்காளுக்காக கிளி வேட்டை நடந்த வரலாற்று நிகழ்வு நடைபெற்றது.
கி.பி.1020-ஆம் நூற்றாண்டில் சோழப்பேரரசுக்கு கப்பம் கட்டும் குறுநில மன்னராக ஆட்சி புரிந்த பொன்னர் - சங்கர் மாமன்னர்களின் வீரவரலாற்றுச் சிறப்புமிக்க மாசிப் பெருந்திருவிழா மணப்பாறை அருகே அண்ணன்மார்கள் வீரப்போரிட்டு மாண்ட இடமான வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோயிலிலும், அவர்கள் கோட்டை கட்டி வாழ்ந்த பொன்னி வளநாட்டிலும் பிப்பரவரி 20 முதல் நடைபெறுகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, பொன்னர் - சங்கர் மன்னர்களின் பெற்றோர் மாண்டுவிடா தங்கை அருக்காணி என்னும் தங்காளின் ஆற்றாமையைப் போக்க பொன்னர் வீரமலை பகுதிக்குச் சென்று கிளி வேட்டை நடத்தி கிளி பிடித்து தந்த வீர வரலாற்று நிகழ்வு பொன்னி வளநாட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அப்போது பொன்னர் - சங்கர் அடுத்தடுத்த ஏழு வனங்களில் கிளியைத் தேடியும் அது கிடைக்காத நிலையில் அந்த வனங்களை துவம்சம் செய்துவிட்டு இறுதியில் ஆலமரத்தில் இருந்த கிளி கண்டுபிடித்து அதை பக்தர்களிடம் காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பொதுமக்கள், பக்தர்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் அந்தக் கிளியை தங்கையிடம் ஒப்படைத்தார் பொன்னர். இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தந்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொன்னர் சங்கர் குதிரை வாகனத்தில் சென்று அம்பு போடும் வேடபரி திருவிழா இன்று (திங்கட்கிழமை) மாலையில் நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி அளவில் வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோவில் முன்பு இருந்து பெரியகாண்டியம்மன் தேர்பவனியும், மார்ச் 1-ந்தேதி (புதன்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn