71 தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி, பாதுகாப்பு விதிகளை பின்பற்ற அறிவுறுத்தல்
திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் பொறுப்பேற்றதிலிருந்து திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியும், பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார்.
எதிர்வரும் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் பாதுகாப்புடன் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்யும் விதமாக திருச்சி மாநகரத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு விற்பனை கடை நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்த நபர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மேற்படி தற்காலிக பட்டாசு விற்பனை கடை நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்த நபர்களில் உரிய பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு உபகரணங்கள் வைக்கப்பட்டு உரிய முன்னெச்சரிக்கை வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி 1.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகம், திருச்சி, 2.திருச்சி மாநகர ஆயுதப்படை உதவி ஆணையர் அலுவலக வளாகம், மாநகர ஆயுதப்படை, திருச்சி
3. தளவாய், தமிழ்நாடு சிறப்புக்காவல் படை முதலாம் அணி அலுவலக வளாகம், 4. அமராவதி நுகர்வோர் கூட்டுறவு அங்காடி, திருச்சி மற்றும் 67 நபர்கள் என மொத்தம் 71 நபர்களுக்கு, நிபந்தனையுடன் கூடிய தற்காலிக பட்டாசு விற்பனை கடை நடத்த திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் உரிமம் வழங்கப்பட்டது.
மேலும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் தற்காலிக பட்டாசு விற்பனை கடை நடத்த உரிமம் வழங்கி கீழ்கண்ட நிபந்தனையை தெரிவித்தார். கடையின் முன்பு புகைபிடிக்கக்கூடாது என்றும், நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள நேரங்களில் மட்டும் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று அறிவிப்பு பலகை வைத்திருக்க வேண்டும். கடையில் அவசர கால மின்விளக்கு (Emergency Light) வைத்திருக்கவேண்டும்.
அனுமதிக்கப்பட்ட பட்டாசு அளவைவிட கூடுதலாக சேமிப்பு வைத்திருக்க கூடாது. தற்காலிக பட்டாசு விற்பனை கடை பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். 90 டெசிபல் ஒலி அளவுக்கு மேல் ஒலி எழுப்பக்கூடிய வெடிபொருட்களை விற்பனை செய்யக்கூடாது. சீனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெடிபொருட்கள் விற்பனை செய்யக்கூடாது.
தடை செய்யப்பட்ட வெடி பொருள்களையும் விற்பனை செய்யக்கூடாது. தண்ணீர் வாளி, மணல் வாளிகள் மற்றும் 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 தண்ணீர் தொட்டி, மணல் மூட்டைகள் மற்றும் தீயணைப்பான்கள் வைத்திருக்க வேண்டும். தரமான மின் ஒயர்கள், இணைப்புகள், மின்சார சாதனங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மின்சார விளக்குகள் தொங்க கூடியதாக இல்லாமல் சுவற்றில பதிந்து இருக்க வேண்டும்.
மெயின் மின் இணைப்பு, பியூஸ்,சர்க்யூட் பிரேக்கர் வெளியில் அமைக்க வேண்டும். கடையினை படிக்கட்டுகள், மின் தூக்கிகள் கீழ்ப்பகுதியிலோ அருகாமையிலோ அமைக்கக்கூடாது. தரைதளம் தவிர மாடிகளிலும், நிலவறைகளிலும் பட்டாசுகளை சேமிக்கக்கூடாது. பட்டாசு விற்பனை துவங்கிய பின் மற்ற பொருட்களை விற்பனை செய்யக்கூடாது.குடியிருப்பு பகுதிகள் மேல் தளங்களில் இருந்தால் பட்டாசு கடை வைத்து விற்பனை செய்யக்கூடாது.
கடையின் பக்கத்தில் விளம்பரத்திற்காக பட்டாசுகளை தெரியும்படி வைக்கக்கூடாது. கடைகளின் அருகே பட்டாசு கொளுத்த அனுமதிக்ககூடாது. கைத்துப்பாக்கி பட்டாசு வெடித்து காண்பிக்கக்கூடாது. ஈர சாக்குகள் வைத்திருக்க வேண்டும். தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு நிலையம் அல்லது 101 தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய எண்ணெய் போன்ற பொருட்கள் கடையில் வைத்திருக்க கூடாது. பட்டாசு சேமிக்கப்பட்டுள்ள இடத்தில் சமையல் செய்யக் கூடாது. கடையை மூடும் போது பலமுறை கவனத்துடன் பார்வையிட்டு மின் இணைப்புகளை துண்டித்து பின் மூட வேண்டும் என நிபந்தனையை தெரிவித்து கொண்டார்கள்.
மேற்படி நிபந்தனைகள் மற்றும் வெடிபொருள் சட்ட விதிகளை உரிமதாரர்கள் மீறும்பட்சத்தில் மனுதாரருக்கு வழங்கப்பட்ட தற்காலிக பட்டாசு உரிமம் எவ்வித முன்னறிவிப்புமின்றி உடனடியாக இரத்து செய்யப்படும் என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO