ஆன்லைன் நிறுவனம் நடத்தி பல கோடி மோசடி செய்த திருச்சி வாலிபர் கைது

ஆன்லைன் நிறுவனம் நடத்தி பல கோடி மோசடி செய்த திருச்சி வாலிபர் கைது

திருச்சி உறையூர் ராமலிங்க நகரைச் சேர்ந்தவர் மெர்வின் கிறிஸ்டோபர் வயது (28). இவர் ஆன்லைன் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இதில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் முறையில் வேலை செய்து சம்பாதிக்கலாம் என்று அவருக்கு அறிமுகமுள்ள நபர்களிடம் தெரிவித்துள்ளார். இதற்காக புதிய இணைய தள பக்கத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

தங்களது நிறுவனத்தில் சேர பதிவு கட்டணமாக முதல்கட்டமாக 30,000 செலுத்த வேண்டும், இது போன்று மூன்று திட்டங்களை அவர் தெரிவித்துள்ளார். இதை நம்பிய பலர் மெர்வின் கிறிஸ்டோபர் திருச்சி தில்லை நகர் 11வது கிராஸ்சில் அலுவலகத்திற்கு சென்று பணம் செலுத்தி உள்ளனர். மேலும் புதிதாக சேர்பவர்கள் 10 நபர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும் அவர்களுக்கு தாங்கள் ஊதியம் தருவதாக கூறி காப்பீட்டு மற்றும் ஆய்வுக் கட்டணம் என பல நிலைகளில் பல லட்ச ரூபாய் பெற்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் முதல் பணம் பெற்றவர்களுக்கு மெர்வின் கிறிஸ்டோபர் கூறியபடி ஊதியமும், லாபத்தில் பங்கும் கொடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட நபர்கள் மெர்வின் கிறிஸ்டோபரிடம் கொடுத்த பணத்தையும், ஊதியத்தையும் கேட்டபோது தொடர்ந்து ஏமாற்றி வந்ததாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த பாதிக்கப்பட்டவர்கள் திருச்சி தில்லைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் மெர்வின் கிறிஸ்டோபர், அவரது தந்தை சேவியர் ராஜ் (68), தாய் மேரி (58), சகோதரி மோனிகா ஜெனட் (33), உறவினர் தம்பு ஆகிய 5 பேர் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் தில்லை நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று தில்லை நகர் காவல் ஆய்வாளர் மணி ராஜ் தலைமையிலான போலீசார் மெர்வின் கிறிஸ்டோபரை கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆன்லைன் நிறுவனம் மூலம் டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்தால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி சென்னை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் இதில் ஏமாந்து இருப்பதாகவும், 5 கோடிக்கு மேல் பணத்தை மெர்வின் கிறிஸ்டோபர் ஏமாற்றி இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். இதில் குறிப்பாக சென்னையை சேர்ந்த அரவிந்தன் (36) என்பவர் 47 லட்ச ரூபாய் கொடுத்து ஏமாந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn