தனியார் பேருந்து ஓட்டுநர்மீது போலீசார் தாக்குதல் - ஓட்டுனர் நடத்துனர்கள் மறியல்

தனியார் பேருந்து ஓட்டுநர்மீது போலீசார் தாக்குதல் -  ஓட்டுனர்  நடத்துனர்கள் மறியல்

திருச்சி மாவட்டம் துவாகுடியிலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் வரை செல்லும் மகமாயி எனும் தனியார் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று மெயின்கார்டுகேட் செயின் ஜோசப் சர்ச் நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தபோது, குறுக்கே சென்ற ஆட்டோ மீது மோதாமல் இருப்பதற்காக திடீர் பிரேக் போட்டதுடன், பேருந்தை நிறுத்தி ஆட்டோ டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அங்கு போக்குவரத்து காவல் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் முனீஸ்வரன் சாலையில் பேருந்து நிறுத்திவைத்து இருந்ததற்காக ஓட்டுநர் செல்வத்தை தகாத வார்த்தையில் திட்டியதாகவும், இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தனியார் பேருந்து ஓட்டுநர் செல்வத்தை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.

வழக்கமாக அதிவேகம் மற்றும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் நின்று கொண்டிருக்கும் பேருந்துகளுக்கு  அபராதம் விதித்துவந்த போலீசார் தற்போது அதுபோன்ற அபராதம் விதிக்காமல் ஓட்டுநரை தாக்கியது கண்டிக்கத்தக்கது என்றுகூறி, காவல்துறையினரின் அராஜகத்தை கண்டித்து தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களும் மெயின்கார்டுகேட் பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு வந்த மலைக்கோட்டை சரக போலீசார் காவல் உதவிஆய்வாளர் மீது நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களை அங்கிருந்து கலைத்தனர்.

தனியார் பேருந்து ஓட்டுநர்களின் திடீர் சாலை மறியலால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டதுடன், 30 நிமிடத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது. மேலும் போலீசார் விசாரணை நடத்தியதில் உதவி ஆய்வாளர் ஓட்டுனரை தாக்கியது உண்மை என்று தெரியவந்த நிலையில் உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை உயர் அதிகாரிகள்  தெரிவிக்கின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj


#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO