சிறை கைதி மரணம் - நீதிபதி தலைமையில் விசாரணை

சிறை கைதி மரணம் - நீதிபதி தலைமையில் விசாரணை

திருச்சி அருகே உள்ள பழூர் காந்திநகரை சேர்ந்த திராவிடமணி என்பவரை ஜீயபுரம் டி.எஸ்.பி பாலச்சந்தரின் தனிப்படை போலீசார் 66 மது பாட்டில்களுடன் கடந்த 26ம் தேதி பிடித்துள்ளனர்.இதனையடுத்து திராவிட மணியை அழைத்து சென்ற ஜீயபுரம் போலீசார் 27ம் தேதி வரை போக்குவரத்துக் காவல் நிலையத்தில் கஸ்டடியில் வைத்துள்ளனர்.

பின்னர் 27ஆம் தேதி மதியம் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு திராவிட மணி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த திராவிட மணிக்கு 28ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிறை மருத்துவரால் முதலுதவி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறைக் காவலர்கள் திராவிட மணியை திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர்.

அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனை அடுத்து திராவிட மணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது பற்றி தகவல் அறிந்த திராவிட மணியின் உறவினர்கள் சிறையில் போலீசார் தாக்கியதால் தான் திராவிட மணி உயிரிழந்தார் எனக் கூறி திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக கேட்டுக் கொண்டனர். ஆனால், திராவிட மணியின் இறப்பிற்கு உரிய நீதி கிடைக்காமல் நாங்கள் கலைந்து செல்ல மாட்டோம் எனக் கூறி அவர்கள் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனை அடுத்து கைதி திராவிட மணியின் உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என்று உறவினர்கள் தெரிவித்தனர் மேலும் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி இறப்புக்கான காரணம் தெரிவித்தால் மட்டுமே உடலை பெற்றுக் கொள்வோம் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் இதன் அடிப்படையில் இன்று நீதிபதி தலைமையில் விசாரணை விசாரணை நடைபெற இருக்கிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision