கேர் கலை அறிவியல் கல்லூரியில் உலக வானொலி தினம்
கேர் கலை அறிவியல் கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன் துறை உலக வானொலி தினத்தை இன்று கொண்டாடியது. இந்த நிகழ்ச்சியில் விஷுவல் கம்யூனிகேஷன் மற்றும் வானொலியில் நாட்டம் கொண்ட பிற துறையைச் சேர்ந்த 60 மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.
உலக வானொலி தினத்தின் சிறப்பு விருந்தினராக திருச்சி சூரியன் பண்பலையின் நிகழ்ச்சி நிரலாக்கத் தலைவரும் அறிவிப்பாளருமான அபிராமி கலந்துக் கொண்டார். வானொலி தின கொண்டாட்டத்தின் போது பேசிய அறிவிப்பாளர் அபிராமி, ‘வானொலி மனிதனின் அன்றாட நிகழ்வுகளில் ஒவ்வொரு தருணத்திலும் சத்தமில்லாமல் பயணித்து, நம்முடைய எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப நம்மை முழுமையடையச் செய்யும் வெகுஜன ஊடகமாக இருந்து வருகிறது.
உலகின் எந்த மூலையில் இருந்தாலும், எந்தவித இயற்கை இடர்பாடுகளை நாம் சந்தித்தாலும் நமக்கு தகவல் தெரிவிக்கும் முதன்மை ஊடகம் வானொலி தான். குரல் ஒன்றை மட்டுமே முதன்மை சக்தியாக கொண்டு இயங்கும் வானொலி, மனிதனின் உணர்வுகளோடு ஒன்றிப்போய்விடுகிறது, என வானொலியின் முக்கியத்துவத்தினை மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார். மேலும், 15 வருடங்களாக வானொலி அறிவிப்பாளராக தனது அனுபவங்களையும் மாணவர்களிடம் பகிர்ந்துக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய அபிராமி, வானொலி அறிவிப்பாளராக வணக்கம் திருச்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது தன்னுடைய அன்றாட அனுபவங்களையும், அந்த நிகழ்ச்சியில் உரையாடும் பொது மக்களின் உணர்வுகளையும் பகிர்ந்து, வானொலி நம்மில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களை விளக்கினார். பின், ஆங்கிலேயர்களுக்கு தெரியாமல் ரகசிய வானொலி நிலையத்தை நடத்தி, இந்திய விடுதலைக்காக பாடுபட்ட உஷா மேத்தாவை நினைவுக் கூர்ந்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு கேர் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் து.சுகுமார் தலைமைத் தாங்கினார். தலைமை உரையில், உலக வானொலி தினத்தின் இந்த ஆண்டு கொண்டாட்டத்திற்காக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ள வானொலி மற்றும் அமைதி என்ற தலைப்பில் உரையாடினார். விஷுவல் கம்யூனிகேஷன் துறைத் தலைவர் கோகுலன் வரவேற்புரை வழங்க, பேராசிரியர்கள் சாகுல் ஹமீது மற்றும் பத்மாவதி ஆகியோர் உடனிருந்தனர்.
# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn