சிரமத்தை பொதுமக்கள் பொறுத்து கொள்ள வேண்டும் - திருச்சியில் அமைச்சர் பேட்டி
திருச்சியில் இன்று மெகா தடுப்பூசி சிறப்பு முகாமை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடக்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.என்.நேரு... திருச்சி மாவட்டத்தில் இன்று 1220 முகாமில் 60,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநகரில் ஒரே நேரத்தில் பாதாள சாக்கடை திட்டமும், குடிநீர் குழாய் அமைக்கும் பணியும் நடைபெற்றுவருகிறது. இந்த இரண்டு பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களிடம் சரியான ஒருங்கிணைப்பு இல்லாமல் இருந்ததால் இந்த பணிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அபைத்து ஒப்பந்ததாரர்களையும் அழைத்து ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தி உள்ளோம்.
இந்த இரண்டு திட்டங்களிலும் பணிகள் நிறைவடைந்த பகுதியில் 242 சாலைகள் போடப்பட்டுள்ளது. அடுத்த 2 மாதத்தில் எஞ்சிய சாலைகள் பணிகள் நிறைவடையும். குறிப்பிட்ட நாட்களுக்குள் பணிகளை முடிக்காவிட்டால் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளோம். சாலை அமைக்கும் பணியின் போது ஏற்படும் சிரமத்தை பொதுமக்கள் பொறுத்து கொள்ள வேண்டும். பாதாள சாக்கடை மற்றும் கழிவு நீர் அகற்றும் வசதிகள் தமிழ்நாட்டில் தான் அதிகம் உள்ளது.
மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை தடுக்கவும், அதனால் ஏற்படும் உயிர் இழப்புகளை தடுக்கவும், நவீன இந்திரங்களுடன் கூடிய புதிய வாகன வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. வீடுகளிலோ, வணிக நிறுவனங்களிலோ சாக்கடை அடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் அவற்றை சரி செய்ய உடனே உள்ளாட்சி துறையினரை தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். அடைப்பை சரி செய்ய தனிப்பட்ட முறையில் யாரையும் அழைத்து பணியில் ஈடுபடுத்தக்கூடாது. இந்த விவகாரத்தில் பொதுமக்களும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் ஆர். வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் செஸ்டாலின் குமார், எம். பழனியாண்டி, மாவட்ட ஊராட்சித் தலைவர் த.ராஜேந்திரன் மற்றும் கோட்டத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO