காசிக்கு சென்று வந்த புண்ணியம் கிட்டும் நம்பெருளை வெள்ளி கருடசேவை
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் பெரியகோவில் என அனைவராலும் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் மாசி மாதத்தில் 9 நாட்கள் நடைபெறும் மாசித்தெப்ப உற்சவத்தின் 4ம் நாளான இன்று நம்பெருமாள் வெள்ளி கருடவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
முன்னதாக ஸ்ரீரங்கம் மேலூர் தோப்பு ஆஸ்தான மண்டபத்திலிருந்து வெள்ளி கருடவாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி சாலையில் வழியாக சென்று பின்னர் 4 உத்திர வீதிகள் வழியாக வலம்வந்து பின்னர் வாகனமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஸ்ரீரங்கத்தில் தை, மாசி, பங்குனி மாதங்களில் கருடசேவை நடைபெற்று வந்தாலும் மாசிமாதம் நடைபெறும் கருடசேவையில் மட்டுமே நம்பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் எழுந்தருளுவார்.
மற்ற மாதங்களில் தங்ககருடவாகனத்தில் எழுந்தருளி காட்சியளிப்பார். 'காசிக்குச் சென்றுவந்த புண்ணியம் மாசிக்கருடனைத் தரிசிக்க கிட்டும்' என்பது ஐதீகம் என்பதால், கருடவாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்த நம்பெருமாளை வழிநெடுகிலும் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு வணங்கிச் சென்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான மாசி தெப்பத்திருவிழா வருகின்ற மார்ச் 2ம் தேதி நடைபெறஉள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn