திருச்சியில் 9 லட்சம் பணத்துடன் மது போதையில் கிடந்த ரயில்வே ஊழியர்

திருச்சியில் 9 லட்சம் பணத்துடன் மது போதையில் கிடந்த ரயில்வே ஊழியர்

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் காவலர்கள் விஜயலட்சுமி, நாகலட்சுமி, பிரசாந்த் ஆகியோர் ரயில் நடைமேடையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது முதலாவது நடைமேடையில் உள்ள இருக்கையில் வாலிபர் போதையில் மயங்கி கிடந்தார். அவரின் காலடியில் விலை உயர்ந்த செல்போன் மற்றும் ஒரு பை இருந்தது. இதை பார்த்த போலீசார் அவரை எழுப்பினர். ஆனால் அவர் எழுந்திருக்க முடியாமல் மது போதையில் இருந்து உள்ளார்.

பின்னர் அந்தப் பையை சோதனை செய்த போது அதில் கட்டு கட்டாக பணம் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்தப் பையையும், செல்போனையும் பத்திரமாக மீட்டு மதுபோதையில் இருந்த நபரை தெரிய வைக்க முயற்சி செய்தனர். பின்னர் அவருக்கு போதை தெளிந்ததால் அவரிடம் விசாரணை நடைபெற்றது.

இதில் திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா புள்ளம்பாடி அண்ணா நகர் சேர்ந்த வெங்கடேசன் (38) என்பதும், திருச்சி ரயில் நிலையத்தில் எலக்ட்ரிக்கல் பிரிவில் முதுநிலை டெக்னீஷணியாக பணியாற்றி வருவதும், அவருடைய மனைவி கோவை ரயில் நிலையத்தில் பணியாற்றி வரும் தெரிய வந்தது.

மேலும் வங்கியில் கடன் பெற்று கோவையில் சொந்த வீடு கட்டி வருவதும் அதற்காக வங்கிக் கணக்கில் இருந்து ரூபாய் 9 லட்சம் எடுத்துக்கொண்டு மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவைக்கு செல்வதற்காக திருச்சி ரயில் நிலையம் வந்துள்ளார். ஆனால் அவர் போதையில் இருந்ததால் மங்களூர் ரயிலை தவற விட்டுள்ளார் என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து ஒன்பது லட்சம், செல்போன், மூன்று வங்கி காசோலை புத்தகம் ஆகியவற்றை வெங்கடேசனிடம் போலீசார் ஒப்படைத்தனர். பின்னர் கோவையில் உள்ள வெங்கடேசன் மனைவிக்கு தகவல் கொடுத்து திருச்சிக்கு வரவழைத்தனர். இதனைத் தொடர்ந்து வெங்கடேசனுக்கு அறிவுரை கூறிய போலீசார் அவரை மனைவியுடன் சேர்த்து அனுப்பி வைத்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn