சமயபுரம் தெப்பக்குளத்தில் மூழ்கிய சரக்கு மினி வேன் மீட்பு

சமயபுரம் தெப்பக்குளத்தில் மூழ்கிய சரக்கு மினி வேன் மீட்பு

திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் உள்ள அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். மாதத்தில் அனைத்து நாட்களிலும் வெளியூர்களில் இருந்து தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்ற பாதயாத்திரையாக நடந்து வருகின்றனர்.

அவ்வாறு நடந்து வரும் பொதுமக்கள் திருச்சி சமயபுரம் நால்ரோடு அருகே உள்ள தெப்பக்குளத்தில் குளித்துவிட்டு கோவிலுக்கு வருவது வழக்கம் மேலும் அவர்கள் வேண்டி இருந்த நேர்த்திக்கடன் அக்கினி சட்டி எடுத்தல் பால்குடம் எடுத்தல் மற்றும் குழந்தையை தொட்டில் வைத்து கொண்டு வருதல் அழகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்கள் இந்த தெப்பக்குளத்தில் இருந்து தான் எடுத்து வரப்படுகிறது. 

இந்நிலையில் அந்த தெப்பக்குளம் அருகே வாடகை வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் நிறுத்துமிடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் வெளியூர்களில் இருந்து அம்மன் படம் வைத்து அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் இங்கு நிறுத்தப்படுவதும், நேர்த்திக்கடன் கொண்டு செல்லும் பொழுது அந்த வாகனத்தையும் எடுத்துச் சென்று விடுவர். இந்நிலையில் இன்று மதியம் 2 மணி அளவில் லோடு ஏற்றும் மினி வேன் ஒன்று அந்த தெப்பக்குளத்தில் உள்ளே மூழ்கியுள்ளது.இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் குளத்தில் உள்ளே வாகனம் இறங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அதன் பின்னர் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் வந்து வாகனத்தை நீக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வாகனத்தில் உள்ளே யாரும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்னர் வாகனம் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் கிரேன் மூலம் மீட்கப்பட்டது. வாகனத்தை யார் அங்கு நிறுத்தியது வாகனம் தானாக தெப்பக்குளத்தில் உள்ளே இறங்கியதா? யாரேனும் வாகனத்தை உள்ளே தள்ளிவிட்டார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision