சமயபுரம் மாரியம்மன் கோயில் தைபூசத் திருவிழா கொடியேற்றம்

சமயபுரம் மாரியம்மன் கோயில் தைபூசத் திருவிழா கொடியேற்றம்

தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாக சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் ஆகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் மற்றும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலிருந்து பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.

இதன்படி முதல்நாளான இன்று  காலை 7 மணிக்கு கோயிலின் பிரகாரத்தில் உள்ள கொடிமரத்தில்  சிவாச்சாரியர்களைக் கொண்டு வேதமந்திரங்கள் முழங்க, அஸ்திர தேவர்களுக்கும், தங்க கொடி மரத்திற்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோயிலின் குருக்கள் பிச்சை, சாமிநாதன், கணேசன் ஆகிய குருக்கள் சமயபுரம் மாரியம்மன் படம் தாங்கிய  தைப்பூசக் கொடியினை மந்திரங்கள், மேளதாளங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு அபிஷேகமும், 6 மணிக்கு மஹா தீபாராதணையும், இரவு 8 மணிக்கு அம்மன் மர கேடயத்தில் எழுந்தருளி, திருவீதி உலா நடைபெறுகிறது.

கொடியேற்ற விழாவில் கோயில் இணை ஆணையர் சி.கல்யாணி,  கோயில் மணியக்காரர்  பழனிவேல் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து  ஜனவரி 27ம் தேதி  முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை தினசரி காலை 10 மணிக்கு கோயிலிருந்து அம்மன் பல்லாக்கில் எழுந்தருளி திருவீதி உலாவும், மாலை 5 மணிக்கு  அபிஷேகமும், 7 மணிக்கு மஹா தீபாராதணையும் இரவு 8 மணிக்கு அம்மன் தினசரி மர கேடயம், மர சிம்ம, மர பூத, மர அன்ன வாகனம்,  மர ரிஷப வாகனம்,  மர யானை வாகனம், வெள்ளி சேஷ வாகனம்,  வெள்ளிக்குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்று, இரவு 9 மணிக்கு அம்மன் மூலஸ்தானம் அடைகிறார்.

9ம் திருநாளான  3 ம் தேதி காலை 10 மணிக்கு திருக்கோயிலிருந்து அம்மன் பல்லக்கில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்று,  மாலை 5 மணிக்கு அபிஷேகமும்,  இரவு 7 மணிக்கு தீபாராதனையும், இரவு 8 மணிக்கு அம்மன் தெப்பத்தில் காட்சியளிக்கிறார். பின்னர் இரவு 11 மணிக்கு  திருவீதி உலா வந்து ஆஸ்தான மண்டபம் அடைகிறார். 10ம் நாளான 4ம் தேதி காலை 8 மணிக்குள் அம்மன் கோயிலிருந்து தைப்பூசத்திற்காக கண்ணாடி பல்லாக்கில் எழுந்தருளி நொச்சியம் வழியாக திருக்காவிரி சென்றடைதலும், மாலை 3 மணிக்கு தீர்த்த வாரி கண்டருளுதலும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை சீரங்கம் அரங்கநாதரிடமிருந்து சீர் பெறும் நிகழ்ச்சியும்,  இரவு 1 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மகா அபிஷேகமும், அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

11ம் நாளான 5ம் தேதி காலை 6 மணிக்கு வடதிருக்காவிரியிலிருந்து அம்மன் கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி நொச்சியம், மண்ணச்சநல்லூர் வழியாக நடைபாதை உபயங்கள் கண்டருளி இரவு 11 மணிக்கு அஸ்தான மண்டபம் சேருதலும், இரவு 11 மணிக்கு  அம்மனுக்கு அபிஷேகம் நடைப் பெற்றுகொடி மரத்திற்கு அம்மன் புறப்பாடாகி கொடி படம் இறக்கம் நிகழ்வு நடைபெறுகிறது. இரவு 12 மணிக்கு கேடயத்தில் அம்மன் திருவீதி உலா வந்து திருக்கோயில் சேர்ந்து அர்த்தஜாம பூஜை நடைபெற்று திருக்கோயில் நடை சாத்துதல் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் சி.கல்யாணி மற்றும் கோயில் பணியாளர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn