சமயபுரம், உறையூர் கோயில் சித்திரைத் தேர் திருவிழா பாதுகாப்பு - ஆலோசனை

சமயபுரம், உறையூர் கோயில் சித்திரைத் தேர் திருவிழா பாதுகாப்பு - ஆலோசனை

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் வருகின்ற 19.04.2022 செவ்வாய்க் கிழமையன்று நடைபெறுகின்ற 
சித்திரைத் தேர்த் திருவிழா மற்றும் உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் 
திருக்கோயிலில் வருகின்ற 14.04.2022 வியாழக்கிழமையன்று நடைபெறவுள்ள சித்திரைத் தேர்த் திருவிழா ஆகிவற்றிற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுப் பணிகள் குறித்து அலுவலா்களுடனான ஒருங்கிணைப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசும் போது தெரிவித்ததாவது: திருச்சிராப்பள்ளி உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில் மற்றும் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ஆகிவற்றில் நடைபெறவுள்ள சித்திரைத் 
தேர்திருவிழாவினையொட்டி பெருமளவில் பக்தர்கள் வருகை தருவதை முன்னிட்டு 
தேவைப்படும் இடங்களில் சின்டெக்ஸ் டேங்க் நிறுவி, குடிநீர் வசதி செய்து கொடுத்தல், போதிய கழிவறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், குப்பைகளை அகற்றியும், தேர் வருகின்ற பாதைகள் மற்றும் பக்தர்கள் வரும் பாதைகளில் சுகாதாரப்பணிகளையும் செய்திட வேண்டும். பக்தர்களின் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி நெரிசலின்றி சுவாமி தரிசனம் செய்திடவும், பக்தர்களுக்கு பாதுகாப்பு, போக்குவரத்துக் கண்காணிப்பு மற்றும் விபத்துத் தடுப்பு ஆகிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். பக்தா்களுக்குத் தேவையான முதலுதவி உபகரணங்கள், மருத்துவ வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ்
வாகனம் நிறுத்துதல் மற்றும் உரிய மருத்துவர் மற்றும் மருத்துவர்களுடன் கூடிய மருத்துவ முகாம் நடத்துதலை மேற்கொள்ள வேண்டும். தீயணைப்பு வாகனத்தினை ஆயத்த நிலையில் நிறுத்திட வேண்டும்.

சீரான மின் வினியோகம் மற்றும் தேரோட்டம் நடைபெறும் பாதைகளில் மின்வயா் தடையின்றி செல்லத் தேவையான பணியாளா்களுடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பக்தா்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்வதோடு, பேருந்து மற்றும் வாகனம் நின்று செல்லும் இடங்களையும் கண்டறிந்து போதிய பணியாளா்களுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தரமான வகையில் அன்னதான 
உணவு வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும். சாலைகளை செப்பனிட்டு
ஆக்கிரமிப்புகளை அகற்றி பக்தா்களுக்கு சிரமமின்றி வருவதற்கு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இத்திருவிழா நடைபெறுவது தொடர்பாக தேவைப்படுகின்ற 
முன்னேற்பாடுப் பணிகளை தேர்த்திருவிழா தொடங்குவதற்கு முன்பாகவே முடித்து தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற அனைத்து அலுவலர்கள் தேவைப்படும் முன்னேற்பாடு நடவடிக்களை மேற்கொள்ள வேண்டும்.

உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயிலில் வருகின்ற 14 ஆம் தேதி 
அதிகாலை முதல் இரவு வரையிலும், சமயபுரம் திருக்கோயிலில் வருகின்ற 18 ஆம் தேதி காலை முதல் 19 ஆம் தேதி இரவு வரை கூடுதல் கவனத்துடன் தொடர்புடைய 
அலுவலர்கள் தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்நிகழ்வில், சமயபுரம் திருக்கோயில் இணை ஆணையர் சி.கல்யாணி, மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளர் (பொது) ச.ஜெயப்பிரித்தா மற்றும் இத்திருக்கோயில்களின் அலுவலர்கள் தொடர்புடைய துறைகளின் அலுவலர்கள் திருக்கோயில் பக்தர்களின் 
பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO