2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் செயல்பட்டுக்கு வந்தது தெரு நாய்கள் கருத்தடை மையம் - பொதுமக்கள் நிம்மதி
திருச்சி மாநகரில் தெரு நாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை பிடித்து வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுமட்டுமன்றி தெருநாய்கள் படித்ததில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை படுகாயமடைந்தனர். இந்நிலையில் திருச்சி உறையூர் கோணக்கரை சாலையில் உள்ள மின் மயானம் வளாகத்தினுள் 90 லட்சம் மதிப்பீட்டில் 254.73 சதுர மீட்டரில் புதிதாக நாய்கள் கருத்தடை மையம் கட்டப்பட்டது.
இந்த மையத்தில் ஒரேநாளில் 30 நாய்கள் வரை கருத்தடை செய்ய முடியும். ஒரே நேரத்தில் 100 நாய்கள் வரை இங்கு தங்க வைக்க இடவசதியும் உள்ளது. ஆனால் இந்த கருத்தடை மையம் செயல்பாட்டுக்கு வராமல் 2 ஆண்டுகளாக பூட்டியே கிடந்தது. இதனை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்து தெரு நாய்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்த வேண்டும் என பல்வேறு அமைப்பினர் மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதனையடுத்து திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளில் சுற்றி திரியும் தெரு நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்து ரேபிஸ் தடுப்பூசி போடும் பணிகள் உறையூர் கோணக்கரை பகுதியில் அமைந்துள்ள திருச்சி மாநகராட்சி நாய் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தில் 03.08.2021 முதல் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. முதல் நாளான இன்று 7 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் 10 முதல் 20 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படும். மேலும் மாநகராட்சி ஆணையர் உத்தரவுபடி மாநகர் நல அலுவலரின் மேற்பார்வையில் கேர் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்தின் மருத்துவர் ஆர் ஜெயகிருஷ்ணா மூலம் இப்பணிகள் திருச்சி மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn