போலியான சித்த மருந்துகள் விற்றால் கடும் நடவடிக்கை.

போலியான சித்த மருந்துகள் விற்றால் கடும் நடவடிக்கை.

கொரானா நோய்த்தொற்றுக்கு ஆங்கில மருத்துவத்தை  தொடர்ந்து சித்த மருத்துவத்தையும் பின்பற்றலாம் என்ற அரசு அறிவித்துள்ள நிலையில் போலி சித்த மருந்துகள் விற்கப்படுவதாக மக்களிடமிருந்து வந்த புகார்களின் அடிப்படையில் திருச்சி மாவட்டம் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை, திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர் எஸ்.காமராஜ் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது, திருச்சி, கரூர், பெரம்பலூர், மற்றும் அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் போலியான சித்தா ஆயுர்வேத மருந்துகள் விற்கப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து புகார் வந்த வண்ணம் உள்ளது. ஆங்கில மருந்து கடையாக இருந்தாலும், சித்த ஆயுர்வேதா ஹோமியோபதி மருந்து கடைகள் ஆக இருந்தாலும் வாங்கி விற்க கூடிய மருந்துகள் அனைத்தும் அரசு உரிமம் பெற்ற மருந்துகளாக இருக்க வேண்டும். அதாவது மருந்துகள் தயாரிக்க அரசு அனுமதி எண், மருந்தில் கலந்துள்ள மூலப் பொருட்களின் பெயர்கள், எவ்வளவு சதவிகிதம் ஒவ்வொரு மருந்தும் கலந்துள்ளது, மருந்து தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, மருந்தின் விலை, மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் முழு முகவரி இவை அனைத்தும் அச்சிடப்பட்டு மருந்துகள் மீது ஒட்டப்பட்டு இருக்க வேண்டும்.

இந்தக் குறிப்புகள் உள்ள மருந்துகளை மட்டுமே மருந்து கடைகள், நாட்டு மருந்து கடைகள், ஆங்கில மருந்து கடைகள் வாங்கி விற்க வேண்டும். மேற்கண்ட குறிப்புகள் இல்லாமல் யார் விற்றாலும் எந்த கடையில் இருந்தாலும் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர், மாவட்ட மருந்து ஆய்வாளர் அவர்களின் திடீர் ஆய்வில் கண்டறியப்பட்டாலும், இதற்காக  அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ குழுவினர் திடீர் ஆய்வின் போது கண்டறியப்பட்டாலோ போலியான மருந்துகளை வாங்கி விற்பவர்கள் உடைய கடை உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் உரிமையாளர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்படுகிறார்கள்.

பொதுமக்கள் சித்தா, ஆயுர்வேத ஹோமியோபதி மருந்துகளை வாங்கும் பொழுது மேற்கூறிய அனைத்து குறிப்புகளும் இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்து வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx