திருச்சி என்.ஐ.டி யில் மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் - அதிர்ச்சி

திருச்சி என்.ஐ.டி யில் மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் - அதிர்ச்சி

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் ஒன்றான திருச்சி என்.ஐ.டி கல்லூரி இந்தியாவில் உள்ள என் ஐ டி யில் முதலிடத்தில் உள்ளது. இங்கு வெளிநாடு, வெளி மாநில மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பொறியியல், வணிக மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதியில் தங்கியிருந்த மாணவி ஒருவரிடம் எலக்ட்ரிஷன் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அதன் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் என்.ஐ.டி கல்லூரி மாணவர்கள் விடிய விடிய கல்லூரி நுழைவாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிரச்சினை ஓய்ந்த நிலையில் மீண்டும் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி நான்கு பக்க கடிதங்களை எழுதி வைத்துவிட்டு மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முதலாம் ஆண்டு எம் சி ஏ படிக்கும் மாணவி ஓஜஸ்வி குப்தா மாயமான சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

அந்த மாணவி தனது படிப்பில் போதிய கவனம் செலுத்த முடியாமலும், தேர்வு பயத்தினாலும், உடன் படிக்கும் சீனியர் மாணவர்களின் கேலி கிண்டல்களால் நான் கல்லூரியை விட்டு மாயமாகிறேன் என கடிதம் எழுதி வைத்து விட்டு சென்றார். இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் துவாக்குடி போலீசார் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தேடி வருகின்றனர். மேலும் அந்த மாணவியின் பெற்றோர் மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் அவர்களை சந்தித்து தங்களது மகளை விரைவில் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அங்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதுவரை அந்த மாணவி எங்கு சென்றார் எப்படி இருக்கிறார் என்ற விபரம் கிடைக்காத நிலையில் மத்திய பிரேதேச போலீசார் மற்றும் தமிழக போலீசார் மாணவியை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இத்தகைய சூழலில் திருச்சி என்.ஐ.டி யில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் அளவுக்கு அதிகமான பாரசிட்டாமல் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மீண்டும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சுஜய் சிதி (18) என்ற மாணவி திருச்சி என்ஐடி கல்லூரியில் முதலாம் ஆண்டு கட்டிடக்கலை பயின்று வருகிறார். இந்நிலையில் அவர் கல்லூரி விடுதியில் தங்கி படிக்க விருப்பம் இல்லாததாலும் ஆர்க்கிடெக்சர் படிப்பின் மீது விருப்பம் இல்லாததால் நேற்று முன்தினம் விடுதியில் அளவுக்கு அதிகமான பாரசிட்டாமல் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதனை அடுத்து சக மாணவிகளால் மீட்கப்பட்டு அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து அங்குள்ள சக மாணவர்களிடம் கேட்ட பொழுது இதுபோல் அடிக்கடி அதிக மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சியில் மாணவ மாணவிகள் ஈடுபடுவது என்பது அடிக்கடி நடைபெற தான் செய்கிறது நிர்வாகம் கண்டு கொள்வதில்லை என்கின்றனர். 

கடந்த ஒரு மாதத்திற்குள் திருச்சி என்ஐடி கல்லூரியில் மாணவி மீது பாலியல் சீண்டல், மாணவர்களின் போராட்டம், மாணவி மாயம், மாணவி தற்கொலை முயற்சி இப்படி அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு என் ஐ டி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே காரணம் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision