குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வுக் கூட்டம்

குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வுக் கூட்டம்

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (30.06.2024) வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அபூர்வா தலைமையில், வேளாண்மைத்துறை இயக்குநர் பா.முருகேஷ் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் ஆகியோர் முன்னிலையில் குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மற்றும் அரியலூர் ஆகிய ஏழு மாவட்ட அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் வேளாண் உற்பத்தியை பெருக்கி உழவர் பெருமக்களின் வாழ்வு வளம் பெற தமிழ்நாடு அரசு பல முன்னோக்கு திட்டங்களை கடந்த மூன்றாண்டுகளில் செயல்படுத்தி வருகிறது. உணவு தானிய உற்பத்தியை பெருக்கவும், உழவர் பெருமக்களின் வருமானத்தை அதிகரிக்கவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அதனடிப்படையில் டெல்டா மாவட்டங்களில் வேளாண் பெரு மக்களின் நலனை கருத்தில் கொண்டும், டெல்டா விவசாயிகளை காக்கும் விதமாக ரூ.78.67 கோடி மதிப்பீட்டில் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தை அறிவித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இதனைத் தொடர்ந்து குறுவை சாகுபடி செய்யும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், திருச்சி மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலர் அபூர்வா, தலைமையில் வேளாண்மை இயக்குநர் பா.முருகேஷ், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் முன்னிலையில் திறனாய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அரசு முதன்மைச் செயலர் அறிவுரை வழங்கியது...... ஆய்வு கூட்டத்தில் குறுவை நெல் சாகுபடி பரப்பை அதிகரித்தல், நெல் இயந்திர நடவுக்கு மானியம் வழங்குதல், சாகுபடி செய்யப்படும் மிகச் சன்ன நெல் இரகங்கள் பரப்பை அதிகரித்தல், விதை இருப்பு, நுண்ணூட்டக் கலவைகள், ஜிங்க் சல்பேட், ஜிப்சம் மற்றும் மாற்று பயிர் சாகுபடிக்கு தேவையான, விதை இருப்பு, நுண்ணூட்டக் கலவைகள், நுண்ணுயிர் உரங்கள் ஆகியன குறித்து விரிவான ஆய்வு செய்யப்பட்டு விநியோகத்தை பருவத்தே விரைந்து முடித்து அடுத்த சம்பா சாகுபடிக்கு தயாராக வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், முதலமைச்சரின் மண்ணுயிர காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உரப் பயிர் சாகுபடி விதை விநியோகத்தினை தொகுப்பாக விரைவில் விநியோகிக்குமாறும், பாரம்பரிய நெல் இரகமான சீவன் சம்பாவினை அதிக அளவில் சாகுபடி செய்ய முயற்சி எடுக்கவும், பயிர்களில் எவ்வித பூச்சி நோய் தாக்காமல் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பயிர் உற்பத்தி திறனை அதிகரிக்க தொழில்நுட்பங்களை அனைத்து விவசாயிகளுக்கும் சென்றடைய எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்திட அறிவுரையாக வழங்கினார்.

மேலும், வேளாண்மை இயக்குநர், சென்னை அவர்கள் குறுவை சாகுபடி திட்டத்திற்கான பயனாளிகளை உடனடியாக தேர்வு செய்திடவும், தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இடுபொருட்களை வழங்கிடவும் அறிவுரை வழங்கினார்கள்.

வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலர் அவர்கள் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் நெல் அறுவடை இயந்திரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுரை வழங்கினார்கள். மேலும் வேளாண் இயந்திரமயமாக்கல் துணை இயக்கம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைவாக முடித்திட அறிவுறுத்தினார்கள்.

மேற்கண்ட ஆய்வு கூட்டத்திற்கு வேளாண்மை பொறியியல் துறை தலைமைப் பொறியாளர் முருகேசன், டெல்டா மாவட்டங்களின் வேளாண்மை இணை இயக்குநர்கள், வேளாண்மை துணை இயக்குநர்கள், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர்கள் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர்கள் கலந்துகொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision