கடத்தப்பட்ட சிலைகளை மீட்டு கோவில்களில் வைத்து பிரதிஷ்டை செய்ய வேண்டும் - பொன் மாணிக்கவேல் பேட்டி

கடத்தப்பட்ட சிலைகளை மீட்டு கோவில்களில் வைத்து பிரதிஷ்டை செய்ய வேண்டும் - பொன் மாணிக்கவேல் பேட்டி

கோயிலை காப்போம் கோயில் உரிமையை மீட்போம் என்ற மையக்கருத்தில், ஆன்மீக அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஆன்மிக விழா திருச்சி திருவாணைக்காவல் பகுதியில் நடைபெற்றது. இவ்விழாவில் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி பொன்மாணிக்கவேல் தலைமையில், கோயில் அர்ச்சகர்கள், கிராம கோவில் பூஜாரிகள், இந்துத்துவ அமைப்புகளை சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கிடையே பொன்.மாணிக்கவேல் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், கோவில் விக்கிரகங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. 1960 மற்றும் 1970 ஆம் ஆண்டுகளில் மீட்கப்பட்ட கடத்தல் விக்கிரகங்கள் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு அருங்காட்சியகங்களிலும், கலைக்கூடங்களிலும் காட்சி பொருளாக வைத்து வருமானம் ஈட்டுவது வேதனையளிக்கிறது. அந்த விக்கிரகங்களை சம்மந்தப்பட்ட கோவில்களில் வைத்து பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் உள்ள சுமார் 35 ஆயிரம் கோவில்கள், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இக்கோவில்களில் தினசரி சராசரி வருமானம் ரூ.16.90 முதல் ரூ.27 வரை இருக்கிறது. அதேசமயம் கோவில்களில் இருந்து இந்து சமய அறநிலையத்துறையினர் சட்டவிரோத வருமானம் ஈட்டுகின்றனர். இந்தத் துறை கோவில்களை நிர்வகிக்கும் பொறுப்பை மட்டும் செய்ய வேண்டும். மாறாக கோவில்களில் சிலைகளை நிர்மாணிப்பது, கோவில்களை புனரமைப்பது, கும்பாபிஷேகங்கள் நடத்துவது போன்றவற்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.

இந்து சமய அறநிலைத்துறையில் நடைமுறையில் உள்ள சட்டங்கள் நீக்கப்பட வேண்டும். இந்தியாவில் இருந்து 2 ஆயிரத்து 622 தெய்வ விக்கிரகங்கள் கடத்தப்பட்டு இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு கொண்டுசென்று அங்கே காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் மீட்கப்பட்டு அந்தந்த கோயில்களில் வழிபாட்டிற்காக நிர்மாணிக்கப்பட வேண்டும். கோவில்கள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு செத்த பூனை போல் உள்ளது.

அறநிலையத்துறை சட்டங்கள் அந்த துறையின் ஆணையருக்கு சகல அதிகாரங்களையும் கொடுத்து அவரை சர்வாதிகாரி போல் செயல்பட வைக்கிறது. அந்த சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision