திருச்சியில் தாசில்தார் வாகனம் முற்றுகை - வாக்குவாதம்

திருச்சியில் தாசில்தார் வாகனம் முற்றுகை - வாக்குவாதம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ளது காந்தளூர் ஊராட்சி. இங்கு உள்ள கல்லாங்குத்து பகுதியில் சுமார் 25 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அதனை அப்பகுதியைச் சேர்ந்த பட்டியலிட சமூகத்தினர் கடந்த 60 ஆண்டுகளாக உழுது விவசாயம் செய்து வந்தனர்.

தற்பொழுது அந்த நிலத்தை அரசு இலவச குடிமனை வழங்குவதற்காக எடுக்க உள்ளது என்ற தகவல் அறிந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூட்டம் கூட்டி ஆலோசனை செய்தனர். அதில் 60 ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் நிலத்தை தங்களுக்கே பட்டா வழங்கி உதவ வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து இன்று மனு கொடுத்து கோரிக்கை வைப்பது என்று முடிவு செய்தனர்.

இந்நிலையில் இன்று காலை ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்பதற்காக திருவெறும்பூர் தாசில்தார் செயபிரகாசம் தலைமையில் வருவாய்த் துறையினர் காவல் துறையினர் காந்தளூர் கிராமத்திற்கு வந்தனர். அப்பொழுது நிலத்தில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காந்தலூர் ஊராட்சி முன்னாள் தலைவர் மாரிமுத்து ஆகியோர் தாசில்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் விவசாயிகள் காந்தளூர் மாதா கோயில் தெரு பின்புறம் உள்ள சாலையை மறித்து வருவாய்த் துறை மற்றும் காவல்துறை வாகனங்களை செல்ல விடாமல் சாலையில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் விவசாயிகளும் அதிகாரிகளும் இடையே அந்த இடத்திலேயே பேச்சுவார்த்தை நடத்தியதில், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு கொடுத்து, இது சம்பந்தமாக அமைதிப் பேச்சு வார்த்தை நடத்திய பின்பும் ஆக்கிரமிப்புகளை அகற்றலாம் என்று முடிவு எடுக்கப்பட்டதில் விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision