தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் திருச்சி நீதிமன்ற வளாகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம்:
மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான விபத்தில் விபத்துக்கு காரணமானவர்கள் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் திருச்சி நீதிமன்ற வளாகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம்.
மேட்டுப்பாளையத்தில் நடந்தது என்ன?
“இன்னும் இந்தச் செவுரு எத்தனை பேர பலி வாங்கப் போகுதோ?” என்ற மெட்ராஸ் பட வசனம், மேட்டுப்பாளையத்தில் நிஜமாகிவிட்டது. ஊருக்குள் மழை வராதா என்று ஏங்குபவர்களுக்கு மத்தியில், பழங்குடி மக்களும், பட்டியலின மக்களும் எப்போது என்ன நடக்குமோ… என்ற அச்சத்திலேயேதான் மழை நாள்களைக் கடப்பார்கள்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நடூரில் இருக்கிறது கண்ணப்பன் லே அவுட். மேட்டுப்பாளையம் தொழில் அதிபர்களின் ஓங்கி உயர்ந்த வீடுகளை எல்லாம் கடந்து இருக்கிறது இந்தக் காலனி. அந்தத் தாழ்வான பகுதியில் ஏராளமான பட்டியலின மக்கள் வசித்துவருகின்றனர்.
மேட்டுப்பாளையத்தில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. திங்கள் கிழமை அதிகாலை 4 மணி அளவில் 17 பேரின் மூச்சு நிரந்தரமாக அடங்கிவிட்டது.