பா.ஜ.க வினரை திருப்திப்படுத்தவே தமிழ்நாட்டு அரசு வேலைகளில் வெளி மாநிலத்தவரை அ.தி.மு.க அரசு அமர்த்தியது - திருச்சியில் கனிமொழி பேச்சு
திருச்சி திருவெறும்பூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து தி.மு.க மகளிரணி செயலாளர் கனிமொழி பொன்மலைப்பட்டி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது பேசிய அவர்... வரும் தேர்தல் தமிழ்நாட்டின் சுயமரியாதையை, சமூக நீதி ஆகியவற்றை மீட்டெடுக்கும் தேர்தல். அ.தி.மு.க அரசு தமிழர்களின் பண்பாடு, மொழி, கலாச்சாரம் தமிழ்நாட்டின் உரிமைகள் ஆகியவற்றை அ.தி.மு.க அரசு டெல்லியில் அடகு வைத்து விட்டது. அதனை நாம் மீட்டெடுக்க வேண்டும். டெல்லியில் இருக்க கூடியவர்களின் ஆட்சியாக, பா.ஜ.க வின் பினாமி ஆட்சியாக அ.தி.மு.க ஆட்சி உள்ளது. சி.ஏ.ஏ சட்டத்தை தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்தது. ஆனால் அ.தி.மு.க ஆதரித்தது. ஆனால் தற்போது அதை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம் என அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேசன் கடை நியாயவிலை கடையாகவே இல்லை. வேளாண் சட்டங்கள் அமல்படுத்தினால் ரேசன் கடையே இல்லாத நிலை ஏற்படும். வேளாண் சட்டங்களை ஆதரித்த பழனிச்சாமி,தேர்தல் வந்த உடன் அந்த சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்துவோம் என்கிறார். நிறம் மாறிக்கொண்டே இருப்பதற்கு என்ன பெயரோ (பச்சோந்தி) அது தான் பழனிச்சாமி. யார் காலில் விழுந்து பதவி வாங்கினாரோ அவர் காலையே வாரிவிட்டார். அதையும் பா.ஜ.க விடம் ஆலோசனை செய்து விட்டு செய்கிறார். ஜெயலலிதாவிற்கும் துரோகம் செய்துள்ளார். சசிகலாவிற்கும் துரோகம் செய்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக தி.மு.க ஆட்சிக்கு வந்த உடன் விசாரணை செய்யப்படும். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி. பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் இதுவரை கிடைக்கவில்லை. பெண் போலீஸ் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை. இது நாடா இல்லை காடா என தெரியவில்லை. அராஜகம் நிறைந்த ஆட்சியாக இருக்கிறது. இவர்கள் ஆட்சி தொடர்ந்தால் தமிழ்நாடு என்னவாகும் என்பதை நாம் உணர வேண்டும். ஊழலில் மட்டும் தான் முன்னேற்றி வைத்துள்ளார். எல்லா துறைகளிலும் ஊழல் செய்து விட்டு வெற்றி நடை போடும் தமிழகம் என விளம்பரம் செய்கிறார்கள். அந்த விளம்பரம் செய்ததற்கு பதிலாக முதியோர் உதவி தொகை வழங்கப்படும்.
அ.தி.மு.க ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முதியோர் உதவி தொகை, திமுக ஆட்சிக்கு வந்தால் 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். கலைஞர் செய்தது போல் கலைஞரின் மகனும் சொல்வதை செய்வார். மக்களின் பணத்தை எடுத்து தான் விளம்பரங்கள் கொடுத்து வருகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம், யாராவது டிக்கெட் கேட்டால் முதலமைச்சர் எங்களுக்கு இலவசமாக பயணிக்கலாம் என கூறியுள்ளார் என நீங்கள் சொல்லலாம். பா.ஜ.க தமிழ்நாட்டு தேர்தல் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு கூட இந்தியிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ளார்கள்.அதை அ.தி.மு.க வினர் கேள்வி கேட்க மாட்டார்கள். முதுகெலும்பு இல்லாதவர்கள் அவர்கள். பா.ஜ.கவினரை திருப்தி படுத்த தமிழ்நாட்டு அரசு வேலைகளில் வெளி மாநிலத்தவரை அ.தி.மு.க அரசு அமர்த்தியது.
தமிழ்நாட்டை மீட்டெடுக்க தி.மு.க ஆட்சிக்கு வர வேண்டும் என முடிவு செய்து விட்டு தி.மு.க விற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். வரும் தலைமுறைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க உதயசூரியன் சின்னத்தில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU