நூறாவது வயதில் முதுபெரும் இடதுசாரி போராளி தோழர். என் சங்கரய்யா !  

நூறாவது வயதில் முதுபெரும் இடதுசாரி போராளி தோழர். என் சங்கரய்யா !  

வறுமையின் நிறத்தை போக்க வந்தநிறமே சிவப்பு என்று தன் வாழ்நாள் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை மாறாது போராடிய  போராளிகளில் என்றும் மக்கள் மனதில் அழியா புகழ் உடையவர் முதுபெரும் தலைவர் சங்கரய்யா.இந்தியாவில், சுதந்திரப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில், தனது பொது வாழ்க்கையைத் தொடங்கினார் சங்கரய்யா. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, மதுரை மாணவர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் செயலாளராக நியமிக்கப்பட்டார் சங்கரய்யா. மாணவர் சங்கம் மூலம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக மாணவர்களை ஒன்று திரட்டி போராட்டங்களை நடத்தினார். இதற்கிடையில் தன்னை கம்யூனிஸ்ட் கட்சியிலும் இணைத்துக்கொண்டார்.


சங்கரய்யாவின் செயல்பாடுகளை விரும்பாத கல்லூரி நிர்வாகம் அவரைக் கல்லூரியிலிருந்து நீக்க முடிவு செய்தது. இதையடுத்து சங்கரய்யாவுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் மாணவர்கள் களமிறங்க, தனது முடிவை மாற்றிக்கொண்டது கல்லூரி நிர்வாகம். சுதந்திரப் போராட்டம் வலுப்பெற்றிருந்த சமயத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை அழைத்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றச் செய்தார். 

இதன் விளைவாக, இறுதியாண்டு பரீட்சைக்கு, 15 நாள்கள் முன்பாக சிறையில் அடைக்கப்பட்டார் சங்கரய்யா.18 மாதங்கள் சிறையில் கழித்துவிட்டு வெளியே வந்தவர், தொடர்ந்து பாளையங்கோட்டையில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாணவர் பேரணி நடத்தினார். மீண்டும் சிறையிலடைக்கப்பட்டவருக்கு ஆதரவாக, தமிழ்நாடு முழுக்க மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். மிரண்டுபோன பிரிட்டிஷ் அரசு, சங்கரய்யாவை விடுதலை செய்தது.

 வெளியே வந்த பின்னர், தொடர்ந்து பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக முழு நேரத் தீவிர போராட்டங்களை முன்னெடுத்தார். இதனால் மீண்டும் நான்காண்டுக் காலம் சிறையில் அடைக்கப்பட்டு, சித்திரவதைகளை அனுபவித்தார். சிறையிலிருந்த காலத்தில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் காமராஜர் ஆகியோரின் நட்பைப் பெற்றார்.


இந்தியா விடுதலை அடைந்த பிறகு கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாகச் செயல்படத் தொடங்கினார். 1964-ம் ஆண்டு, கருத்து வேறுபாடு காரணமாக கம்யூனிஸ்ட் இயக்கத்திலிருந்து சிலர் வெளியேறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கினர். வெளியேறியவர்களில் சங்கரய்யாவும் ஒருவர்.

பொதுவுடைமை இயக்கத்தின் தமிழ் நாளிதழான `ஜனசக்தி' நாளிதழின் முதல் பொறுப்பாசிரியர் சங்கரய்யாதான். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் `தீக்கதிர்' நாளிதழின் முதல் ஆசிரியரும் இவரே. இவர் ஆசிரியராக இருந்தபோது பொதுவுடைமைச் சித்தாந்தங்களைத் தனது எழுத்தின் மூலம் மக்களிடம் சென்றடையச் செய்தார்.

தமிழ்நாட்டில் முதன்முறையாக 
1967-ம் ஆண்டு காங்கிரஸ் அல்லாத கட்சியாக, தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. அண்ணாதுரை முதல்வரானார். அப்போதுதான் முதன்முறையாக சங்கரய்யாவும் சட்டமன்றத்தில் காலடியெடுத்துவைத்தார். அந்தச் சமயத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் பிரச்னை தீவிரப் போராட்டமாக மாறியிருந்தது. அப்போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த கருணாநிதியை அணுகி பிரச்னைகளைச் சுலபமாகத் தீர்த்துவைத்தவர் சங்கரய்யாதான். கருணாநிதி முதல்வரான பிறகு சுயமரியாதைத் திருமணங்களை அங்கீகரிக்கும் சட்டங்களைக் கொண்டுவந்தபோது, அவருக்கு உறுதுணையாக இருந்தார் சங்கரய்யா.

மூன்று முறை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த சங்கரய்யா,
எம்.எல்.ஏ.வாக மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் இருந்து 1967-ம் ஆண்டிலும், 
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இருந்து 1977, 1980-ம் ஆண்டுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 
1957, 1962-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்களில், மதுரை கிழக்கு சட்டமன்றத்தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
``வறுமையின் நிறம் சிவப்பு அல்ல; வறுமையைப் போக்க வந்த நிறமே சிவப்பு!'' - சட்டமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யா உதிர்த்த வார்த்தைகள் .

 கம்யூனிஸ்ட் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் இருந்திருக்கிறார். சாதி மறுப்பு திருமணங்கள், தீண்டாமை ஒழித்தல், தொழிலாளர் உரிமை ஆகியவற்றுக்காகப் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டிருக்கிறார் சங்கரய்யா.
 மதுரை மாணவர் சங்கம் உருவான நேரத்தில், அதன் செயலாளராக என்.சங்கரய்யா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சாதிக்கலவரங்கள், மத கலவரங்களின்போது அமைதியை உருவாக்க களப் பணியாற்றினார். 1998-ல் கோவையில் மதநல்லிணக்க பேரணியை நடத்தினார். கருணாநிதி மீது அதீத அன்பு கொண்டவர்.சாதிமறுப்பு திருமணங்களை மேடைகளில் பேசுவதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், தன் குடும்ப வாழ்விலும் செயல்படுத்திக் காட்டியவர் சங்கரய்யா. அவர் தொடங்கி, அவரின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் வரை பலரும் சாதி மறுப்பு திருமணங்களையே செய்தனர். இவ்வளவு காலம் மக்கள் பிரச்னைகளுக்காகப் போராடியவர், தற்போது முதுமையின் காரணமாக அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்கிறார்.

 2017-ம் ஆண்டு, தனது 95-வது வயதிலும் ஆணவக் கொலைகளுக்கு எதிரான போராட்டக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார் சங்கரய்யா. சாதி மறுப்பு திருமணங்களை ஆதரித்துப் பேசிய சங்கரய்யா, ``காங்கிரஸ், சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட்டுகள், திராவிட இயக்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு இயக்கத்தினர் போராடிப் பெற்ற சுதந்திர நாட்டில், தீண்டாமைக் கொடுமை ஒழிய வேண்டும்.

வாலிபர்களே, உங்கள் சகோதரிகளின் காதலை அங்கீகரியுங்கள். 
என் குடும்பத்தில் கலப்புத் திருமணங்கள் செய்திருக்கிறோம். எனவேதான் கூறுகிறேன், உங்கள் சகோதரி தனக்கேற்ற ஒருவரைத் தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்துகொள்ள விரும்பினால், நீங்கள் சாதி, மதம் பார்க்காமல், அவருக்காகப் போராடி திருமணத்தை நடத்திவைக்க வேண்டும்'' என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்திய விடுதலை தொடங்கி, மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகள் வரை பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு, எட்டு ஆண்டுகளைச் சிறையிலும், ஐந்து ஆண்டுகளைத் தலைமறைவாகவும் இருந்து கழித்தவர் சங்கரய்யா. இத்தகைய தியாகங்களைச் செய்திருக்கும் சங்கரய்யாவுக்கு, தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் மட்டுமன்றி இந்திய அரசியல் வரலாற்றிலும், என்றைக்கும் அழியாத இடமுண்டு!பொதுவுடைமை இயக்கக் கொள்கைகளில் உறுதிமிக்க சங்கரய்யா அவர்கள் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் சொத்தாகவும் வாழும் வரலாறாகவும் திகழ்கிறார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM