திருச்சி மாநகரை அழகாக்கிய வானவில்
கோடை காலம் தொடங்கிய நிலையில் திருச்சி மாவட்டத்தில் வெயில் 105 டிகிரி வரை வெப்பம் வாட்டி வதைத்தது. அதன் பின்னர் வடகிழக்கு பருவமழை பெய்ததால் திருச்சி மக்கள் சிறிது நிம்மதி அடைந்தனர். அக்னி நட்சத்திரம் முடிந்தும் மழை தொடர்ந்து பெய்து வந்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்களும் நிம்மதி அடைந்தனர். இந்த நிலையில் திருச்சியில் சில நாட்களாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. ஆனால் மாலை நேரங்களில் குளிர்ந்த காற்று வீசி மழை பெய்து வருகிறது. நேற்று மாலை 4 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மாநகரில் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை நீர் ஆறாக ஓடியது. குறிப்பாக பள்ளி கல்லூரிகள் முடியும் நேரம் என்பதால் மாணவ, மாணவிகள் வீட்டிற்கு செல்ல பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். சுமார் அரை மணி நேரம் பெய்த மழையால் திருச்சி குளிர்ந்தது. இந்த நிலையில் மழை பெய்து நின்ற சிறிது நேரத்தில் திருச்சி கிழக்கு திசை பகுதியில் வானவில் தோன்றி வர்ணஜாலமாக காட்சியளித்தது. இதனை திருச்சி மக்கள் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்தனர். திருச்சியை அழகாக மாற்றிய இந்த வானவில்லை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.