20 கிராமங்களில் தினமும் 5,000 நபர்களுக்கு உணவளித்து உதவும் ஸ்ரீரங்கம் ஸ்ரீமான் டிரஸ்ட்

20 கிராமங்களில் தினமும் 5,000 நபர்களுக்கு உணவளித்து உதவும் ஸ்ரீரங்கம் ஸ்ரீமான் டிரஸ்ட்

திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீமான் டிரஸ்ட் மூலம் திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள 20 கிராமங்களில் உள்ள தினக்கூலி செய்பவர்கள், சாலையோரத்தில்  உள்ள மக்கள் என தினமும் 5000 நபர்களுக்கு உணவு அளித்து வருகின்றனர். இந்நிறுவனத்தின் நிறுவனர் பத்ரி பட்டர்  அவர்களோடு இணைந்து 40 தன்னார்வலர்கள் இதனை செய்து வருகின்றனர். 

இது குறித்து  அவர் கூறுகையில்.... திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஊரடங்கால்  வேலை இல்லாமல் தவிக்கும் தினக்கூலிகளான கிராம மக்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்று கிட்டத்தட்ட 5000 நபர்களுக்கு தினமும் உணவளித்து வருகின்றோம். உணவு வழங்குவதற்கு முன்பாக எங்கள் தன்னார்வலர்கள் எந்தெந்த கிராமங்களுக்கு உணவு தேவைப்படும் என்று நேரடியாக சென்று பார்வையிட்டு  கிராமங்களை தேர்வு செய்தபின் உணவினை அளித்து வருகின்றோம்.

நோய்த்தொற்று காலத்தில் மக்களுக்கு வழங்கும் உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் அரிசியை நேரடியாக விவசாயிகளிடமிருந்து பெறுவதால்
விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் விதமாகவும், ஆரோக்கியமான உணவை மக்களுக்கும் அளித்து வருகின்றோம்.

250 கிலோ அரிசி, 100 கிலோ காய்கறிகள் கொண்டு சமைக்கப்பட்ட உணவினை 3 வாகனங்களில் பெரிய பாத்திரங்களில்  நேரடியாக கொண்டு சென்று அவர்களுக்கு போதும் என்று கூறுமளவிற்கு அளித்து வருகின்றோம். அதுமட்டுமின்றி, தொண்டு நிறுவனத்தின் மூலம் கிராம மக்களுக்கு முக கவசம், கிருமிநாசினி போன்றவற்றையும் வழங்கி வருகிறோம். வாரத்தில் ஒருமுறை குழந்தைகளுக்கு  ஊட்டச்சத்து அதிகரிப்பதற்காக பால் வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளோம்.

கடந்து  ஆண்டும் ஊரடங்கு காலகட்டத்தில் தினமும் 5000 நபர்களுக்கு கிட்டத்தட்ட 184 நாட்கள் உணவளித்து வந்தோம். இந்த இரண்டாம் அலை ஊரடங்கிலும் குறிப்பாக இந்த கிராமப்புற மக்களுக்கு வேலை இல்லாத நேரத்தில் அவர்களுக்கு உதவும் விதமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இதனை செய்து வருகின்றோம். உணவினை வாங்கும் பொதுமக்களும் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கு வலியுறுத்தி வருகிறோம். அதோடு  உணவினை வழங்கும் தன்னார்வலர்களும் முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணிந்து தான் உணவினை வழங்கி வருகின்றோம் என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC