நேர்த்திக்கடன் செலுத்த வந்த பெண், ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கி பலி

நேர்த்திக்கடன் செலுத்த வந்த பெண், ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கி பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம், திட்டக்குடி தாலுகா, காரனூர் ஊராட்சி குதிரைசந்தல் கிராமத்தில் வசித்து வருபவர் ரெங்கன் மகன் வீரன்(வயது 28). இவருக்கும், வசிஷ்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த திவ்யாவுக்கும்(24) திருமணம் நடைபெற்றது. திவ்யா, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மாலை அணிந்து ஆண்டுதோறும் பாதயாத்திரை செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.

அதேபோல, இந்த ஆண்டும் கடந்த வியாழக்கிழமை வசிஷ்டபுரம் கிராமத்திற்கு சென்று மாலை அணிந்து சக பக்தர்களோடு சமயபுரம் மாரியம்மன் கோவில் நோக்கி பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தார். அப்போது தனது குழந்தைகளான மகன் முத்தரசன் (4), கனிமொழி (2) ஆகியோரையும் அழைத்து சென்றிருந்தார்.

திட்டக்குடி வழியாக சமயபுரம் நோக்கி பக்தர்கள் அனைவரும் வந்து கொண்டிருந்தனர். பக்தர்கள் முன்புறம் நடந்து செல்ல பின்னால் சரக்கு வாகனத்தில் சுவாமியை மின்விளக்குகளால் அலங்கரித்து அதற்கு ஜெனரேட்டர் வசதியும் செய்யப்பட்டு இழுத்து வரப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை திருச்சி மாவட்டம் கல்லகம் அருகே அவர்கள் வந்தபோது திவ்யா உடல் அசதியால் தனது மகள் கனிமொழியை தூக்கிக்கொண்டு சுவாமி ஏற்றிவந்த சரக்கு வாகனத்தின் பின்புறம் ஏறி உட்கார்ந்து வந்துள்ளார். அப்போது திவ்யா கண் அயர்ந்து விடவே, அவரது தலைமுடி ஜெனரேட்டரில் சிக்கியது. இதனால், அலறி துடித்த அவரது சத்தம் ஒலிபெருக்கியின் சத்தத்தால் டிரைவரின் காதுகளில் விழவில்லை.

சற்று தூரம் சென்றவுடன் தான் ஜெனரேட்டரில் திவ்யாவின் தலைமோதி படுகாயத்துடன் கிடந்தது அனைவருக்கும் தெரியவந்தது. உடனே சக பக்தர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு திவ்யா கொண்டு செல்லப்பட்டார். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கல்லக்குடி போலீசில், வீரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் போது திவ்யா கையில் இருந்த குழந்தை உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj

#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.co/nepIqeLanO