திருச்சியில் கைவரிசை காட்டும் பலே திருடி - மூதாட்டியை ஏமாற்றி தங்கம், வைரம் நகைகள் திருட்டு

திருச்சியில் கைவரிசை காட்டும் பலே திருடி - மூதாட்டியை ஏமாற்றி தங்கம், வைரம் நகைகள் திருட்டு

திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள கூட்டுறவு நகர், பாலக்காட்டு மாரியம்மன் கோவில் அருகில் வசித்து வந்தவர் சந்திரசேகரன் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி விஜயகுமாரி வயது 80. இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளார்கள். மகன் சேலத்தில் நகை கடை வைத்து நடத்தி வருகிறார். மகள் ராணி (வயது 60) இவர் மட்டும் தாயாருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் விஜயகுமாரி வீட்டில் இருந்தபோது, சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், வீட்டிற்குள் நுழைந்து என்னை அடையாளம் தெரியவில்லையா என்று விஜயகுமாரிடம் பேச்சு கொடுத்து உள்ளார்.

அதற்கு எனக்கு தெரியவில்லை என கூறியுள்ளார். பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டதால் உங்களுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை என்று கூறி உங்களின் கால் ஏன் வீங்கி உள்ளது. இதற்கு எண்ணெய் வைத்துத் தேய்த்து மசாஜ் செய்தால் சரியாகிவிடும் என்று கூறி வீட்டிலிருந்த விஜயகுமாரியின் மகளான ராணியிடம் எண்ணை வாங்கி வருமாறு கூறியுள்ளார். ராணி கடைக்கு சென்று நல்லெண்ணெய் வாங்கி வருவதற்குள், விஜயகுமாரிக்கு செல்போன் மூலம் அழைப்பு வந்துள்ளது. போன் பேசுவதற்காக விஜயகுமாரி ரூமுக்குள் சென்ற பொழுது மர்ம பெண் விஜயகுமாரியை ரூமுக்குள் தள்ளி கதவை தாழிட்டுள்ளார்.

பின்பு வீட்டில் உள்ள அலமாரியில் வெல்வெட் பையில் வைத்திருந்த, தங்கச் செயின், தங்க வளையல்கள், தோடுகள், வைர மோதிரம் உள்ளிட்ட சுமார் 35 சவரன் நகைகளை எடுத்து தப்பிவிட்டார். அதன்பின்பு வீட்டிற்கு வந்த ராணி தாயாரை மீட்டுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம பெண்மணியை தேடி வருகிறார்கள் 

இதேபோன்று துறையூர் நகர் சிலோன் ஆபிஸ் அருகில் தனியாக இருந்த பெண்ணிடம், வீடு வாடகைக்கு கேட்பது போல் வந்த மர்மப் பெண், நைசாக அந்தப் பெண்ணிடம் பேச்சு கொடுத்து, உடல் வலிக்கு தைலம் தேய்க்க வேண்டும் எனக் கூறி அந்தப் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் செயினை கழட்டச் சொல்லி, அதனை எதிர்பாராத நேரத்தில் எடுத்துக் கொண்டு சென்று விட்டார்.

அதே பாணியில் இன்று நகையை மர்மப் பெண் திருடிச் சென்றுள்ளதால் துறையூர் போலீசார் அந்த பலே திருடியை கையும், களவுமாக பிடிக்க தீவிரம் காட்டியுள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் துறையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO