கணவன் மனைவி போல் நாடகமாடி 22 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த இரண்டு பேர் திருச்சியில் கைது
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து இரண்டுபேர் கஞ்சா வாங்கி வருவதாக திருச்சி மாவட்ட போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு சி.ஐ.டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு சி.ஐ.டி போலீசார் திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் திருச்சி நோக்கி வந்த காரை போலீசார் நிறுத்தி விசாரணை நடத்தினர். இதில் காரில் வந்த இரண்டு பேர் தாங்கள் கணவன் மனைவி என்று கூறி முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து இருவரிடமும் போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், கடம்பூரை சேர்ந்த கருப்பையா மகன் சரவணன் (45), மதுரை மாவட்டம், வாடிப்பட்டியை சேர்ந்த ரெங்கநாதன் மனைவி மஞ்சுளா என்கிற மணிமேகலை (30) என்பதும், இருவரும் கணவன் மனைவி இல்லை என்பது தெரியவந்தது.
மேலும் இரண்டு பேரும் திட்டமிட்டு ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்திற்கு சென்று அங்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பூர்ணராவ் என்பவரிடம் 22 கிலோ கஞ்சாவை வாங்கி கடத்தி வந்ததாக தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இரண்டு பேரையும் கைது செய்த போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு சி.ஐ.டி.போலீசார் அவர்களிடம் இருந்து 22 கிலோ கஞ்சாவை கைப்பற்றி காரை பறிமுதல் செய்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision