மாநகர காவல் துறையுடன் இணையும் திருவெறும்பூர் உட்கோட்டம்
திருச்சி மாவட்டத்தலில் ஊரக பகுதியில் உள்ள காவல் நிலையங்கள் திருச்சி மாவட்ட காவல் துறையின் கட்டுப்பாட்டிலும் மாநகரில்உள்ள காவல் நிலையங்கள் திருச்சி மாநகர காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றன. கோட்டை, காந்தி மார்க்கெட், கன்டோன்மென்ட், பாலக்கரை, கே.கே.நகர், எடமலைபட்டி புதூர், பொன்மலை, ஏர்போர்ட், அரியமங்கலம், ஸ்ரீரங்கம், உறையூர், தில்லைநகர், புத்தூர் அரசு மருத்துவமனை ஆகிய 14 காவல் நிலையங்கள் மாநகர காவல் துறையின் கீழ் வருகின்றன. நாட்டிலேயே அதிகமாக வளர்ந்து வரக்கூடிய நகரங்களில் முக்கியமானதாக இருப்பதால் திருச்சியில் வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளாக வேகம் எடுத்துள்ளது குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது.
அதற்கு ஏற்ப குற்றச்செயல்கள் போக்குவரத்து நெருக்கடி போன்றவையும் அதிகரித்து வருகின்றன எனவே கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை எளிதில் மேற்கொள்வதற்காக திருச்சி மாவட்ட காவல் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருவெறும்பூர், துவாக்குடி, நவல்பட்டு, சோமரசம்பேட்டை, ராம்ஜிநகர், கொள்ளிடம் (நம்பர் 1 டோல்கேட்), ஆகிய காவல் நிலையங்கள் திருச்சி மாநகர காவல்துறை உடன் இணைக்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கைகள் எழுந்து வருகின்றனர். இது தொடர்பாக அவ்வப்போது மாநகர காவல்துறை சார்பில் டிஜிபி அலுவலகத்திற்கு கருத்துருக்கள் அனுப்பப்பட்டிருந்தன. ஆனால், இதுவரை எவ்வித விரிவாக்கப் பணிகளும் மேற்கொள்ளபடாமல் இருந்து வந்தது. இந்த சூழலில் திருவெறும்பூர், துவாக்குடி, நவல்பட்டு, பெல், ஆகிய காவல் நிலையங்கள் அடங்கிய திருவெறும்பூர் காவல் உட்கோட்டத்தில் உள்ள பகுதிகளை திருச்சி மாநகர காவல் துறையுடன் இணைப்பதற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.
இதற்காக, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து புதிய கருத்துரு டிஜிபி அலுவலகத்தில் அண்மையில் கேட்டு பெறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இந்த நான்கு காவல் நிலையங்களின் எல்லைகளை நீக்கிவிட்டு, மீதமுள்ள பகுதிகளை உள்ளடக்கி புதிதாக வரைபடம் தயாரித்து அனுப்பி வைக்குமாறு திருச்சி மாவட்ட காவல் துறையினருக்கு டிஜிபி அலுவலகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல, திருவெறும்பூர் உட்பட்ட பகுதிகளை இணைத்து புதிய வரைபடம் தயாரிக்க மாநகர காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
சப் இன்ஸ்பெக்டர் நிலையிலான மணிகண்டம் காவல் நிலையம் திருவரம்பூர் உட் கோட்டத்தில் இருந்தபோதிலும் மாநகர காவல் துறையுடன் இணைப்பதற்கான பரிசீலனை பட்டியலில் இடம்பெறவில்லை. நவல்பட்டு இன்ஸ்பெக்டரின் எல்லை கட்டுப்பாட்டின்கீழ் வருவதாலும் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைய உள்ள பகுதிக்கு அருகில் இருப்பதாலும் இந்த காவல் நிலையத்தினை மாநகர காவல் துறையுடன் இணைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் உற்சவங்கள் நடைபெறுகின்றன எனவே ரங்கநாதரை தரிசித்து செல்வதற்காகவும் சுற்றுலா நோக்கத்திலும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் இங்கு வந்து செல்கின்றனர் விவிஐபி வருகையும் அதிகரித்து வருவதால் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளுக்கு தினமும் இங்கு கூடுதல் போலீசாரை பணியில் அமர்த்த வேண்டிய நிலை உள்ளது. ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் உள்ள போலீசார் பணியில் அமர்த்தும் போது அன்றாட காவல் நிலைய பணிகளில் சிக்கல் ஏற்படுகின்றன. எனவே இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு என தனி காவல் நிலையம் உருவாக்கித் தருமாறு மாநகர காவல்துறை சார்பில் டிஜிபிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் சோமரசம்பேட்டை புத்தூர் காவல் நிலையங்களில் இருந்து சில பகுதிகளை பிரித்து புதிதாக உய்யக்கொண்டான் திருமலை காவல்நிலையம் உருவாக்க வேண்டும். விமானநிலைய போக்குவரத்தை ஒழுங்குபடுத்த புதிய போக்குவரத்து ஒழுங்கு காவல் நிலையம் ஏற்படுத்த வேண்டும் விழாக்கள் மற்றும் விவிஐபிகளின் வருகை போன்றவை அதிக அளவில் இருப்பதால் நெரிசலை தவிர்ப்பதற்காக மாநகர போக்குவரத்து திட்டமிடல் பிரிவு உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கருத்துக்கள் மாநகர காவல் துறையில் இருந்து பல்வேறுகாலகட்டங்களில் டிஜிபி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநகர காவல்துறை அதிகாரிகள் சிலர் கூறியபோது, இந்த விரிவாக்கத்தில் முதற்கட்டமாக திருவெறும்பூர் காவல் உட்கோட்டம் மாநகர காவல் துறையுடன் இணைக்கப்பட உள்ளது இதில் உள்ள நான்கு காவல் நிலையங்களுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுமே தற்போது நகரமயமாகிவிட்டன. எனவே இப்பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்த காவல் உட்கோட்டத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் மட்டுமின்றி திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையம், திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு திருவெறும்பூர் மற்றும் துவாக்குடி போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆகியவற்றையும் இணைக்க கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அடுத்தடுத்த கட்டங்களாக பிற பகுதிகளிலும் மாநகர காவல் துறையுடன் இணைக்கபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மாவட்ட காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதை விட மாநகர காவல்துறையின் கட்டுப்பாட்டுக்கு வரும் போது காவல் நிலையங்களுக்கு கூடுதலான போலீசார் கிடைப்பர் கண்காணிப்பு விரிவடையும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும் புகார்கள் மற்றும் இதர பிரச்சினைகளுக்கான அலைச்சல் தவிர்க்கப்படும் என்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO