திருச்சி விமான நிலையத்திற்கு போக்குவரத்து பிரச்சனையா?

திருச்சி விமான நிலையத்திற்கு  போக்குவரத்து பிரச்சனையா?

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தில் இருந்து மெயின் ரோட்டிற்கு வருவதற்கு 1.5 கி.மீ நடந்து செல்ல வேண்டியுள்ளது என்றும், எனவே, மெயின் ரோட்டில் இருந்து புதிய முனையத்துக்கு செல்ல பேருந்து வசதி செய்ய வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையம் ரூ.1,112 கோடி செலவில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இதனை கடந்த ஜனவரி மாதம் 2 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதனிடையே பணிகள் முழுமை அடையாததால் விமான நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது. விமான நிலையத்தின் புதிய முனையத்தில் 100 சதவீத பணிகள் முடிவடைந்தது. இங்கிருந்து விமானங்களை இயக்குவதற்காக விமான நிலைய அதிகாரிகள் பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து, விமானங்கள் இயக்க அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனர். அதன்பேரில் புதிய முனையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர ஏற்பாடு நடைபெற்றது. இதன்படி கடந்த ஜூன் 11 ஆம் தேதி காலை 6 மணி முதல் விமான நிலையத்தின் புதிய முனையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த புதிய முனையத்தில் 60 வருகை கவுன்ட்டர்கள், 44 புறப்பாடு கவுன்ட்டர்கள் என மொத்தம் 104 நுழைவு கவுன்ட்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

புதிய முனையம் சாலையிலிருந்து சற்று தொலைவில் உள்ளதால் புதிய முனையத்திற்கு அரசு பேருந்துகளை இயக்க வேண்டுமென போக்குவரத்து துறையினரிடம் கோரிக்கை எழுந்துள்ளது. அதாவது புதிய முனையத்தில் இருந்து, முக்கிய சாலைக்கு வர 1.5 கி.மீட்டர் தொலைவு உள்ளதால், அதற்காக போக்குவரத்து வசதி சரிவர செய்யப்படவில்லை என்று பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது மட்டுமின்றி திருச்சி விமான நிலையத்திற்கு எல்லா பகுதிகளில் இருந்தும் பேருந்து வசதிகளை கொண்டு வர வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பன்னாட்டு விமான நிலையமாக செயல்பட்டு வரும் திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து பயணிகள் வருகின்றனர்.திருச்சி மாவட்ட நிர்வாகம் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவது அவசியம் ஆகும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision