"எங்களை போல் உள்ளவர்களுக்கு இவ்வாய்ப்பு கிடைப்பது தன்னம்பிக்கையுடன் அடுத்த இடத்திற்கு செல்ல உதவும்" - திருச்சியில் தேசிய கொடி ஏற்றிய திருநங்கை!!
Advertisement
நாடு முழுவதும் 72 ஆவது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருநங்கைகளுக்கு சிறப்பு செய்யும் வகையில் திருச்சி, தென்னூரில் , சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் இன்று குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பள்ளி தலைமையாசிரியர் ஜீவானந்தன் தலைமையில், திருச்சி மாவட்ட திட்ட அலுவலகத்தில், ஊரக வாழ்வாதார இயக்கத்தில் ஓட்டுநராகப் பணிபுரியும் திருநங்கை எம். சினேகா தேசத்தலைவர்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பின்னர் தேசியக்கொடியினை ஏற்றி சிறப்பு செய்தார்.
விழாவில் திருநங்கை எம். சினேகா அவர்கள் பேசும்போது... "ஆசிரியர்கள் தான் நாம் அனைவருக்கும் முன் உதாரணமாக விளங்க கூடியவர்கள். நாம் கொண்ட லட்சியத்தில் உறுதியாக இருந்தால் வாழ்வில் முன்னேறலாம். எங்களை போல உள்ளவர்களுக்கு இவ்வாய்ப்பு கிடைப்பது நாங்கள் மென்மேலும் தன்னம்பிக்கையுடன் அடுத்த இடத்திற்கு செல்ல உதவும்" என்று கூறினார்.
Advertisement
முன்னதாக பள்ளி ஆசிரியை உமா வரவேற்க, பள்ளி ஆசிரியைகள் சரண்யா, சகாயராணி, உஷாராணி ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
திருநங்கை ஓட்டுநர் எம். சினேகாவின் ஆசை தாம் இரண்டு வருடத்திற்கு மேலாக தற்காலிக ஓட்டுநராகப் பணிபுரிவதாகவும், தமது பணி நிரந்தரம் செய்தால் தமக்கு வாழ்வில் பேருதவியாக இருக்கும் என்று கூறினார்.
Advertisement