14 ஆண்டுகள் நிறைவு செய்தும் முடிவுக்கு வராத திருச்சி விமான நிலைய ஓடுதள விரிவாக்கம்

14 ஆண்டுகள் நிறைவு செய்தும் முடிவுக்கு வராத திருச்சி விமான நிலைய ஓடுதள விரிவாக்கம்

இப்போது அப்படியே திருச்சிக்கு வருவோமாக!

2007 மார்ச் 24ல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெற்றிகரமாக திருச்சியில் தனது முதல் பன்னாட்டு சேவையாக துபய் சேவைய ஆரம்பிக்கிறது. இதற்கு அடுத்த நாள் தனது சிங்கப்பூர் சேவையை ஆரம்பிக்கிறது. 2008, டிசம்பர் 1 அன்று மலேசியாவின் ஏர் ஏசியா தனது முதல் சேவையை கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு தொடங்குகிறது. அன்றைய காலகட்டத்தில் இந்தியன் ஏர்லைன்ஸ் தனது வாராந்திர புஜைராஹ், ராஸ்-அல்-ஹைமாஹ், குவைத் சேவைகளை நிறுத்தி இருந்தாலும், தனது ஷார்ஜா தினசரி சேவையை வெற்றிகரமாக இயக்கியது. இலங்கையின் ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது தினசரி "கொழும்பு - திருச்சி" சேவையையும் இயக்கியது.

அன்றே திருச்சி விமானநிலையத்தின் வளத்தை, குறிப்பாக பன்னாட்டு விமானப்பயணிகள் வளத்தை சரியாகக் கணித்த இந்திய விமானநிலையங்கள் ஆணைக்குழுமம் (Airports Authority of India - AAI), விமானநிலையத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிடுகிறது. குறிப்பாக பெரிய இரக விமானங்களான ஏர்பஸ் A330/340/350 மற்றும் போயிங் B 777/787 போன்ற வகை விமானங்களைக் கையாளும் வகையில் ஓடுதளத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டது.

இதன் தொடர்ச்சியாக, விமானநிலைய விரிவாக்கத்திற்கு தேவையான நிலத்தை மாநில அரசு கையகப்படுத்தித் தரவேண்டி தமிழ்நாடு அரசுக்கு 10 ஜனவரி 2010 அன்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கிறது. இதற்குச் சமீபத்தில்தான் அதாவது தற்போது பயன்பாட்டில் உள்ள பயணிகள் முனையத்தை பிப்ரவரி 2009ல் திறந்திருந்தது. ஆனால் 2010-11 திமுக ஆட்சி, 2011-16 மற்றும் 2016-21 என தொடந்து 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சி, தற்போது 2021 முதல் திமுக ஆட்சி என இன்றுவரை 14 ஆண்டுகளை நிறைவு செய்தும் தமிழ்நாடு அரசானது திருச்சி விமானநிலைய விரிவாக்கத்திற்கு தேவையான நிலத்தை கையகப்படுத்தி இந்திய விமானநிலையங்கள் ஆணைக்குழுமத்திடம் ஒப்படைக்கவில்லை. அது மட்டுமன்றி, நிலம் கையகப்படுத்தல் எந்த நிலையில் உள்ளது என்று கூட தமிழ்நாடு அரசு தெரிவிக்கவில்லை. சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணன் நேரு அவர்கள் இன்னும் 78 ஹெக்டேர் கையகப்படுத்த வேண்டியுள்ளது, வரும் பிப்ரவரிக்குள் கையகப்படுத்தி விடுவோம் என்று கூறினார். இன்னும் 50க்கும் குறைவான நாட்களில் இது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை. 

முதல்வர் ஸ்டாலின், திருச்சி பன்னாட்டு விமானநிலைய திறப்பு விழாவில், 318.85 கோடி செலவில் 294.57 ஏக்கர் நிலத்தை இந்திய விமானநிலையங்கள் ஆணைக்குழுமத்திற்கு கையகப்படுத்தித் தர உள்ளதாகக் கூறினார். ஆனால் 14 வருடங்கள் காத்திருப்பு என்பது மிக நீண்டது. இதற்கிடையில் தமிழ்நாடு அரசானது, கோயம்புத்தூர் பன்னாட்டு விமானநிலைய விரிவாக்கத்திற்கு தேவையான 635.33 ஏக்கர் நிலத்தை 2,082.92 கோடியில் கையகப்படுத்தி உள்ளது. ஆனால், திருச்சிக்கு தேவையான பணம் என்று முதல்வர் குறிப்பிட்டது 315.85 கோடி, கோயம்புத்தூரை ஒப்பிடுகையில் ஏழில் ஒரு பங்கு (1/7) மட்டுமே. பொதுவாக பொருளாதார ரீதியில் கோயம்புத்தூரானது திருச்சியை விட அதிக பங்களிப்பு தருகிறது. ஆனால் விமானத்துறை சார்ந்த பொருளாதாரத்தில் தமிழ்நாட்டில் அதிக பொருளாதார பங்களிப்பைத் தருவது திருச்சியே. இது இந்திய அளவில் அதிக அளவில் பன்னாட்டு விமான பயணிகளைக் கையாள்வதில் 11வது இடத்தில் உள்ளது. விரைவில் திருவனந்தபுரம் மற்றும் அகமதாபாத் விமானநிலையங்களை பின்னுக்குத் தள்ளும். தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து அதிக அளவில் பன்னாட்டுப் பயணிகளைக் கையாள்வது திருச்சியே. தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து அதிக வரி வருவாயைச் சம்பாதித்து தருவது திருச்சியே. தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து அதிக அந்நியச் செலவாணியை சம்பாதித்து தருவது திருச்சியே. தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து அதிக சரக்கு ஏற்றுமதி (Cargo) நடைபெறுவதும் எதிர்கால வளர்ச்சி வாய்ப்புள்ளதும் திருச்சியே. இவ்வாறிருக்கையில் கோயம்புத்தூர் விமானநிலைய விரிவாக்கத்திற்கு தேவையான நிலம் கையகப்படுத்தலை விரைந்து முடித்த தமிழ்நாடு அரசு, கோயம்புத்தூரை விட எளிதான நிலம் கையகப்படுத்தல் உள்ள, கோயம்புத்தூரை ஒப்பிடுகையில் மிகவும் செலவு குறைந்த திருச்சி விமானநிலைய விரிவாக்கத்திற்கு தேவையான நிலம் கையகப்படுத்தலை விரைவு படுத்தினால் தமிழ்நாடு அரசுக்கு பொருளாதார ரீதியாக மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

14 ஆண்டுகளாக திருச்சி விமானநிலைய விரிவிக்கத்திற்கு தேவையான நிலம் கையகப்படுத்தாமல் இருந்தாலும், இந்திய விமானநிலையங்கள் ஆணைக்குழுமம் தனது மிகப்பெரிய பங்களிப்பை திருச்சிக்கு தந்துள்ளது. எப்படி?

2009 ல் தற்போது பயன்பாட்டில் உள்ள 11,778 சதுர மீட்டர் பயணிகள் முனையத்தை திறந்தது. கடந்த 15 ஆண்டுகளில் கிட்டத்தட்ட நான்கு மடங்கு பயணிகள் எண்ணிக்கை அதிகரித்ததால், (கடந்த 2022-23 ல் திருச்சியில் பயணித்த பயணிகள் 1.5 மில்லியன்) தற்போதுள்ள பயணிகள் முனையத்தை விட ஆறு மடங்கிற்கு மேல் பெரிய பயணிகள் முனையத்தை முற்றிலும் நவீன தொழில்நுட்பத்தில், மிகச்சிறந்த கட்டிடக்கலை வடிவமைப்பில் 1,112 கோடி செலவில் கட்டியுள்ளது. இந்த புதிய பயணிகள் முனையத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இது இந்தியாவின் 2ம் நிலை நகரங்களில் கொச்சிக்கு அடுத்து மிகப்பெரியது. இந்திய விமானநிலையங்கள் ஆணைக்குழுமம் நிர்வகிக்கும் விமானநிலையங்களில் மெட்ராஸ், கல்கத்தாவிற்கு அடுத்த மிகப்பெரியது. ஒட்டு மொத்தமாக இந்திய அளவில், டெல்லி, பம்பாய், ஹைதராபாத், பெங்களுரு, சென்னை, கல்கத்தா, கொச்சிக்கு அடுத்த 8-வது மிகப்பெரிய பயணிகள் முனையமாகும்.

இதை ஒப்பிடுகையில் நமது மாநில அரசின் பங்களிப்பு என்ன?

பொதுவாக திமுக அரசைப் பொறுத்து எப்பொழுதும் கல்வி, தொழிற்துறை வளர்ச்சியில் எவ்வித சமரசமும் செய்யாது. வரலாற்றின் அடிப்படையில் அனைத்து கல்வி மற்றும் தொழிற்துறை புரட்சிகளும் தமிழ்நாட்டில் திமுக அரசின் காலகட்டத்தில்தான் இருக்கும். நீதிக்கட்சி தொடங்கி பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா வழியில் கலைஞருக்கு எப்போதும் ஒரு சிறப்பிடம் தமிழ்நாட்டு வரலாற்றில் உண்டு. 2010ம் ஆண்டிலேயே ஒரு வேளை, திருச்சி விமானநிலைய விரிவாக்கத்திற்கு தேவையான நிலத்தை தலைவர் கலைஞர் அவர்கள் கையகப்படுத்தித் தந்திருந்தால், கலைஞர் அவர்களின் எண்ணிலடங்கா சாதனைகள் பட்டியலில் திருச்சி விமானநிலைய விரிவாக்கமும் சேர்ந்திருக்கும். வழக்கம் போல திருச்சி மக்கள் மற்றும் சுற்றுப்புறத்தைச் சார்ந்த காவிரிப்டுகை உள்ளிட்ட மக்கள் மனங்களில் நிறைந்திருப்பார். ஆனால், 2010 காலகட்டங்களில் தமிழ்நாடு விமானத்துறை அவ்வளவு முக்கியத்துவம் பெறவில்லை, மக்களின் தேவைகளும் குறைவாகவே இருந்தது. ஆனால் தற்பொது திருச்சியின் பங்களிப்பானது இந்திய விமானத்துறையில் தவிர்க்க இயலாததாக ஆகிவிட்டது. குறிப்பாக சமீபத்திய வியட்நாம் விமானசேவையின் பெருவெற்றி நமக்கு, திருச்சிக்கு புதிய உத்வேகத்தை, பரிமாணத்தைத் தந்துள்ளது. எனவே தலைவர் கலைஞரிடம் இருந்து தப்பிய, மரியாதைக்குரிய ஜெயலலிதா, பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய முதல்வர்களால் முடியாத விசயம் தற்போது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கைக்கு வந்துள்ளது.

14 ஆண்டுகளாக நீடிக்கும் திருச்சி விமானநிலைய ஓடுதள விரிவாக்கத்திற்கு தேவையான நிலத்தை கையகப்படுத்தி, திருச்சியில் பெரிய இரக விமானங்களான ஏர்பஸ் A330/340/350 மற்றும் போயிங் B777/787 வகை விமானங்களை இறங்கச் செய்து, திருச்சி விமானநிலையத்தைப் பயன்படுத்தும், குறிப்பாக வளைகுடா மற்றும் கிழக்காசியா நாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான திருச்சி, டெல்டா உள்ளிட்ட மக்களுக்கு பயன்படும் வகையில் திருச்சி விமான நிலைய ஓடுதள விரிவாக்க பணிகள் விரைவில் நடைபெற வேண்டும்.

இந்தியாவின் மிக முக்கிய விமான நிலையங்கள் ஒன்றாக மாறிவரும் திருச்சி விமான நிலையத்தில் ஓடுதள விரிவாக்கம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று இதன் மூலம் பன்னாட்டு சேவைகளை அதிகப்படுத்த கூடும் ...அதிக பயணிகளை கையாளுவதால் புதிய டெர்மினல் கட்டப்பட்டதோடு இது போன்ற பல வசதிகளையும் செய்யும்பொழுது இந்திய அளவில் திருச்சி விமான நிலையம் பல.  சாதனைகளை நிகழ்த்தும் ...

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision