திருச்சி மாநகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு - 500 ரூபாய் ஸ்பாட் ஃபைன்?
திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 9ம் வார்டு மேல சிந்தாமணி பகுதியில் விதிமீறல் கட்டிடம் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார் திருச்சி மாநகர ஆணையர் சிவசுப்பிரமணியன்.
Advertisement
இதுகுறித்து அவர் கூறுகையில்... "இப்பகுதியில் உள்ள வீடுகளில் குடிநீர் வினியோகம் எவ்வாறு உள்ளது? குடிநீர் விநியோகத்தின் போது தேவையான அளவு குளோரினேசன் உள்ளதா? வீடு வீடாக குப்பை சேகரிக்கப்படுகிறதா?சேரும் குப்பையை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து தருகிறார்களா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டதில் பெரும்பாலான வீடுகளில் மழைநீர் சேகரிப்பு திட்டம் ஓரிரு வீடுகள் தவிர முற்றிலுமாக செயல்படுத்தப்படவில்லை. எனவே உடனடியாக மழைநீர் சேமிப்பு திட்டத்தை ஏற்படுத்த வேண்டுமென அறிவுறுத்தினேன்.
மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைக்க 15 நாள் காலக்கெடு வழங்கப்படும். அதையும் மீறி மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த தவறும் வீட்டு உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
வரும் நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் ஓயாமரி சுடுகாடு பராமரிப்புக்காக தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. பயன்படுத்தப்பட்ட முகக் கவசங்கள், கையுறைகள் மாநகராட்சி பணியாளர்களால் தனியாக பிரித்தெடுக்கப்பட்டு உரிய முறையில் அழிக்கப்படும். மற்ற மாநகராட்சிகளை ஒப்பிடுகையில் திருச்சியில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளது. பொதுமக்களின் ஒத்துழைப்பும் நன்றாக உள்ளது என தெரிவித்தார்.
மேலும் கழிவு நீரை தேங்க வைத்து நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படுத்தும் வீடுகளுக்கு ஸ்பாட் ஃபைன் ரூபாய் 500 அதிரடியாக வசூலிக்கப்பட்டது.